சென்னை:'மாண்டஸ்' புயலால் ஏற்படும் பாதிப்பை உடனடியாக சீரமைக்க, 30 ஆயிரம் களப்பணியாளர்கள், 17 ஆயிரத்து 500 போலீசார் உட்பட 47 ஆயிரத்து 500 பேர், தயார் நிலையில் களத்தில் உள்ளனர். தேங்கும் நீர், விழும் மரங்களை உடனடியாக அகற்றவும், பாதிக்கப்படுவோருக்கு உணவு வழங்கவும், சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.சென்னையில் 'மாண்டஸ்' புயல் காரணமாக இரண்டு நாட்களில், 10 செ.மீ., மழை பெய்துள்ளது. மேலும், 20க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. புயலால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சீரமைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன்படி, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 30 ஆயிரம் பேர், தொடர் பணிகளில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
![]()
|
மேலும், கட்டுப்பாட்டு அறையில் பணியாற்ற மாவட்ட வருவாய் நிலையிலுள்ள மூன்று அலுவலர், துணை ஆட்சியர் நிலையில் ஆறு பேர் உட்பட, 120 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை அகற்ற, 911 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்காக, 169 நிவாரண மையங்களும், 2.40 லட்சம் பேருக்கு உணவு சமைப்பதற்காக, 25 சமையல் கூடங்களும் தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, நேற்று ஆய்வு செய்தார்.
![]()
|
'மாண்டஸ்' புயலை எதிர்கொள்ள, தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. விழும் மரக்கிளைகளை உடனடியாக அகற்ற 200 வாகனங்கள், 130 ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. கட்டுப்பாட்டு அறைக்கு 110 புகார்கள் வந்துள்ளன.
புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பை எதிர்கொண்டு உடனடி மீட்பு பணிகளை மேற்கொள்ள, மாநகராட்சிதயார் நிலையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
17,500 போலீசார்
எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நேற்று, மீட்பு படை மற்றும் உபகரணங்களை, கமிஷனர் சங்கர் ஜிவால் ஆய்வு செய்தார்.பின், கமிஷனர் அளித்த பேட்டி:புயல் பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட, சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் இருந்து, 12 பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு படையிலும், 10 போலீசார் உள்ளனர்.
படகுகளில் சென்று மீட்கும் பணிக்கு 5 போலீசார் அடங்கிய, நான்கு படைகள் உள்ளன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்களுக்கும், சென்னையின் பல்வேறு இடங்களில் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவர்களுடன் சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து, சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த 16 ஆயிரம் போலீசார், 1,500 ஊர் காவல் படையினர், 24 மணி நேரமும் சுழற்சி முறையில், இரு 'ஷிப்ட்'டுகளாக பணிஅமர்த்தப்பட்டு உள்ளனர்.சென்னை முழுதும் ரோந்து பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இவர்கள், ஒலிப்பெருக்கி வாயிலாக புயல், மழை குறித்து எச்சரிக்கை செய்வர்.அனைத்து ரோந்து காவல் வாகனங்களிலும் அவசர உதவி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டு, 044-- 2345 2372 என்ற பிரத்யேக எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் இந்த எண்ணிற்கும், அவசர போலீஸ் எண்: 100, 112 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
காய்கறி தேக்கம்
கோயம்பேடு சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வரத்து உள்ளது. புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல இடங்களில் ஓட்டல்கள் மற்றும் சாலையோர கடைகளும் திறக்கப்படவில்லை.
இதனால், கோயம்பேடு சந்தைக்கு மக்கள் வரத்து குறைந்தது. கோயம்பேடில் விற்பனைக்கு வந்த 15 லட்சம் கிலோ காய்கறிகள் தேக்கம் அடைந்தன.இதேபோல, பழ சந்தையில் ஆப்பிள், சாத்துக்குடி, சீதாபழம், சப்போட்டா, வாழைப்பழம் உள்ளிட்டவையும் தேக்கம் அடைந்தன.
தோட்டக்கலை பூங்காக்களுக்கு பூட்டு
தோட்டக்கலைத்துறை சார்பில் தேனாம்பேட்டையில் செம்மொழி பூங்கா, கோபாலபுரத்தில் செங்காந்தள் பூங்கா, கிண்டியில் அம்மா பூங்கா, மாதவரத்தில் தோட்டக்கலை செயல்விளக்க பூங்கா, வண்ணாரபேட்டையில் பாரம்பரிய பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு அரியவகை மரங்களும், பூச்செடிகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 'மாண்டஸ்' புயல் சின்னம் காரணமாக, சென்னையில் நேற்று காலை முதலே காற்றின் வேகம் அதிகரித்தது. இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் வைத்து பூங்காக்கள் மூடப்பட்டன. அங்கு புயல் ஓய்ந்தபின், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின், பூங்காக்களை திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெட்ரோ, மின்சார ரயில்கள் ஓடும்
சென்னை ரயில் கோட்டம் செய்திக் குறிப்பு:சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில், உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 044 - 2533 0714, 044-2533 0952 ஆகிய உதவி எண்களில் தொடர்பு கொண்டு, ரயில் இயக்கம் குறித்த தகவல்களை
பெறலாம். சென்னை, புறநகரில் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன. தேவைப்பட்டால், சேவையில் மாற்றம் செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் இருந்தால், பிறகு அறிவிக்கப்படும்' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளில் புகுந்த கடல் நீர்
'மாண்டஸ்' புயலால் மெரினா, பட்டினப்பாக்கம் பகுதியில் கடல் சீற்றம் அதிகமானது. கரையை தாண்டி கடல் நீர், சீனிவாசபுரம் பகுதியிலுள்ள வீடுகளில் புகுந்தது. அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு, போலீசார் அறிவுறுத்தினர்.
வெறிச்சோடிய கடற்கரை
சென்னை மெரினா, பெசன்ட் நகர், பாலவாக்கம், திருவான்மியூர், திருவொற்றியூர் கடற்கரைகளில், 'மாண்டஸ்' புயல் காரணமாக பொதுமக்கள் செல்ல மாநகராட்சி தடை விதித்தது. மறு அறிவிப்பு வரும் வரை, கடற்கரை பகுதிகளுக்கும், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்கும் செல்ல வேண்டாம்.
மரங்கள், தற்காலிக கூடாரங்களின் கீழ் நிற்க வேண்டாம் என, மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
துாண்டில் வளைவு சேதம்
'மாண்டஸ்' புயலால் வடசென்னையில் காசிமேடு, திருவொற்றியூர், எண்ணுார் மீனவ கிராமங்களை ஒட்டிய கடற்கரை பகுதிகளில், கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்படுகிறது.இப்பகுதியில், ஆக்ரோஷமாக வரும் அலைகளின் வேகத்தை கட்டுப்படுத்த, ராட்சத பாறாங்கற்களை கொட்டி, துாண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.தற்போது கடல் சீற்றத்தால், எண்ணுார் பெரியகுப்பம் பகுதியில், 'டி' வடிவிலான துாண்டில் வளைவு கற்கள் துாக்கி வீசப்பட்டு, அலங்கோலமாக காட்சிஅளிக்கின்றன.