மனிதர்கள் அனைவருக்கும் மதம், இனம், மொழி, நிறம், அரசியல் பாகுபாடின்றி அனைத்து உரிமைகளும் கிடைப்பதை உறுதி செய்வதே மனித உரிமை தினத்தின் நோக்கம்.
உறுதி செய்த அரசியலமைப்பு சட்டம்
ஐ.நா., சபையால் 1948 டிச., 10 ல் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் ஏற்று கொள்ளப்பட்டது. 2023ம் ஆண்டு 75வது மனித உரிமை தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. 2022ம் ஆண்டு அனைவருக்கும் மனித மாண்பு, சுதந்திரம், நீதி என்பதை அடிப்படை கருத்தாக பன்னாட்டு சபை அறிவித்துள்ளது. பல்வேறு மனித உரிமைகளை அடிப்படை உரிமைகளாக இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைத்து குடிமகன்களுக்கும் உறுதி செய்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தினால் உறுதி செய்யப்பட்ட அல்லது இந்திய நீதிமன்றங்களால் அமல்படுத்தக்கூடிய பன்னாட்டு உடன்படிக்கைகளில் உள்ளடங்கிய வாழ்வு, தன்னுரிமை, சமத்துவம், தனிநபர் மாண்பு குறித்த உரிமைகளை குறிப்பது தான் மனித உரிமை.
விரிவடைந்து செல்லும் எல்லை
மனித உரிமைகள் என்பதன் பொருளாக நீதிமன்றங்கள் விரிவான விளக்கங்களை அளித்து கொண்டுள்ளன. மனித உரிமைகளின் எல்லை நாளுக்கு நாள் விரிவடைகிறது. மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் அவர்களுடனேயே பிறந்த அடிப்படையான விட்டு கொடுக்க முடியாத உரிமைகளை மனித உரிமைகள் என்கின்றனர். மனித உரிமைகள் குறித்த கருத்துக்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என திருவள்ளுவர் மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கான உரிமைகளை குறிப்பிட்டு பிறப்பினால் வேறுபடுத்தல் கூடாது என்றார்.
அரசின் கடமை
'ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை' என்ற திருக்குறளில் ஒருவருக்கு வரக்கூடாத நிலை என்பது தன்னை பெற்ற தாய் பசியால் வாடுவதை கண்டு வேதனைப்படும் நிலையாகும். ஆனால் அந்த நிலையிலும் சான்றோர்கள் பழிக்கும் வகையில் மற்றவர்களின் மனித உரிமைகளை மீறும் வகையில் செயல்படக்கூடாது என குறிப்பிட்டுள்ளார். மேலும், 'முறை செய்து காப்பாற்றும் மன்னவன்' என்று மனித உரிமைகளை காக்கும் மன்னனை இறைவனுக்கு சமமானவர் என கூறும் திருவள்ளுவர், கொடுங்கோல் ஆட்சியினால் மனித உரிமைகள் மீறப்பட்டு துன்பம் தாங்க முடியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் மனம் வருந்தி அழும் கண்ணீரே மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகும் என எச்சரிக்கையும் விடுக்கிறார்.
அனைத்து தமிழ் இலக்கியங்களிலும் மனித உரிமைகளையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை மனித உரிமைகளை பாதுகாப்பது அரசின் கடமை என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்ட உரிமைகள் தற்போது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமைகளாகவும், அடிப்படை கடமைகளாகவும் மக்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட விலை மதிக்க முடியாத மனித உரிமைகள் மீறப்படும் போது உயர்நீதிமன்றத்தை அணுகி உரிமை பாதிக்கப்பட்ட நபரோ அல்லது பொது நலனில் அக்கறை கொண்டுள்ளவரோ நீதிப்பேராணை(ரிட்) மனு தாக்கல் செய்து நீதி பெறும் உரிமை மறுக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இலவச சட்ட உதவி ஆணையம் தாலுகா நிலையிலுள்ள நீதித்துறை நடுவர் /உரிமையியல் நீதிமன்றம் முதல் டில்லி உச்சநீதிமன்றம் வரையிலும் செயல்படுகிறது.
மற்றவர் உரிமையை பாதுகாப்போம்
நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்து தேவைப்படும் கடினமான நடைமுறைகளை பின்பற்ற முடியாததால் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது தடுக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் எளிமையாக நீதி பெறும் வகையில் மாநில மனித உரிமைகள் ஆணையமும், தேசிய மனித உரிமைகள் ஆணையமும் மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆணையத்திற்கு பாதிக்கப்பட்டவரோ அல்லது அவர்களின் சார்பாக பொதுநலனில் அக்கறை கொண்டவரோ தாய்மொழியில் நீதிமன்ற கட்டணம் செலுத்தாமலும் புகார் செய்யலாம்.
நம் மனித உரிமைகளை பாதுகாக்க போராடும் அதே வேளை மற்றவர்களின் மனித உரிமைகளையும் மீறாமல் இருக்க வேண்டியது கடமையாகும். மனித உரிமைகளை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்புகளை அணுகி நம் உரிமைகளையும் மற்றவர்களின் உரிமைகளையும் பாதுகாப்போம். மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வையும், மனித உரிமை பண்பையும் நம்மிடையே வளர்த்தெடுப்போம் என இந்த மனித உரிமை தினத்தில் உறுதி ஏற்போம்.
-முனைவர் ஆர்.அழகுமணி வழக்கறிஞர், மதுரை 98421 77806