வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்,-குஜராத் சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, தற்போதைய முதல்வர் பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். நாளை மறுதினம் நடக்கும் நிகழ்ச்சியில், குஜராத்தில் பா.ஜ., அரசு தொடர்ந்து ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.
![]()
|
குஜராத் சட்டசபையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், 156 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ., சாதனை படைத்தது. 1995 முதல் 27 ஆண்டுகளாக குஜராத்தில் பா.ஜ., ஆட்சியை தக்கவைத்து வந்துள்ளது.
தற்போதைய வெற்றியின் வாயிலாக ஏழாவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
'தற்போதைய முதல்வர் பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார்' என, தேர்தலுக்கு முன் பா.ஜ., தலைமை அறிவித்தது.
தேர்தலில் வெற்றி உறுதியான பின், இதை மாநில பா.ஜ., தலைவர் மீண்டும் உறுதி செய்தார். நாளை மறுதினம் நடக்கும் நிகழ்ச்சியில் பூபேந்திர படேல் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
இதை தொடர்ந்து, காந்திநகரில் உள்ள கவர்னர் மாளிகைக்கு நேற்று வந்த பூபேந்திர படேல், தன் ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் அளித்தார்.
படேலுடன், குஜராத் மாநில பா.ஜ., தலைவர் சி.ஆர்.பாட்டீல், தலைமை கொறடா பங்கஜ் தேசாய் ஆகியோர் உடன் வந்தனர். அவரது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.
கவர்னருக்கு, மாநில பா.ஜ., தலைவர் பாட்டீல் அளித்துள்ள கடிதத்தில், அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.,வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
![]()
|
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை கொறடா பங்கஜ் தேசாய் கூறியதாவது:
காந்திநகரில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகமான கமலத்தில் இன்று காலை 10:00 மணிக்கு பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
புதிய அரசு பொறுப்பேற்கும் வரை காபந்து முதல்வராக பூபேந்திர படேல் தொடர்வார். புதிய முதல்வரின் பதவி ஏற்பு விழா, நாளை மறுதினம் காந்திநகரில் உள்ள, 'ஹெலிபேட்' மைதானத்தில் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள 48 தொகுதிகளில், 40 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், மூன்று தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது. கடந்த 2017 சட்டசபை தேர்தலின் போது, சவுராஷ்டிரா பகுதியில் 28 தொகுதிகளை கைப்பற்றிய காங்., இந்த முறை பெரும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் 19 இடங்களை மட்டுமே பிடித்த பா.ஜ., இழந்த செல்வாக்கை மீண்டும் துாக்கி நிறுத்தி உள்ளது. இங்கு, ஆம் ஆத்மி நான்கு இடங்களை கைப்பற்றி உள்ளது.மத்திய குஜராத்தில் உள்ள 61 தொகுதிகளில், பா.ஜ., 56 இடங்களில் வென்றுள்ளது. காங்., நான்கு இடங்களை மட்டுமே பிடித்தது. மத்திய குஜராத்தின் வாக்ஹோதியா தொகுதியில், பா.ஜ., சார்பில் ஐந்து முறை வெற்றி பெற்ற வேட்பாளர் மது ஸ்ரீவஸ்தவா இந்த முறை சுயேச்சையாக களம் இறங்கினார். ஆனால் அவர் நான்காவது இடம் பிடித்தார். இந்த தொகுதியில் மற்றொரு சுயேச்சை வேட்பாளரான தர்மேந்திர வகேலா என்பவர் பா.ஜ., வேட்பாளர் அஸ்வின் படேலை தோற்கடித்தார்.வடக்கு குஜராத்தின் 32 தொகுதிகளில் 22 இடங்கள் பா.ஜ.,வுக்கும், எட்டு காங்.,குக்கும், இரண்டு சுயேச்சைக்கும் சென்றன. தெற்கு குஜராத்தின் 35 தொகுதிகளில் பா.ஜ., 33 தொகுதிகளை கைப்பற்றியது. காங்., மற்றும் ஆம் ஆத்மி தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன.