வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிம்லா,-ஹிமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவு செய்வதில், காங்கிரஸ் தலைவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
![]()
|
ஹிமாச்சலில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
இதையடுத்து, அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவு செய்வதற்காக, சிம்லாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராஜிவ் சுக்லா, பூபேஷ் பாகேல் உள்ளிட்டோர் மேலிட பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர், மறைந்த வீர்பத்ர சிங்கின் மனைவியும், லோக்சபா எம்.பி.,யுமான பிரதிபா சிங், 66, அடுத்த முதல்வருக்கான போட்டியில் முன்னிலையில் உள்ளார்.
காங்., மூத்த தலைவர்கள் ராகுல் கவுல் சிங், முகேஷ் அக்னிஹோத்ரி, சுக்வீந்தர் சிங் சுகு, ஹர்ஷ்வர்தன் சவுகான் ஆகியோரும் முதல்வர் கனவில் உள்ளனர்.
இந்நிலையில், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்த இடத்தில் திரண்ட பிரதிபாவின் ஆதரவாளர்கள், பூபேஷ் பாகேலின் காரை மறித்து கோஷமிட்டனர்.
'பிரதிபாவை முதல்வராக தேர்வு செய்ய வேண்டும்' என, அவர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சுக்வீந்தர் சுகுவின் ஆதரவாளர்களும் அந்த இடத்தில் திரண்டு, அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.
![]()
|
பிரதிபா கூறுகையில், ''என் கணவரின் பெயரைக் கூறித் தான் தேர்தலில் காங்., வெற்றி பெற்றது. எனவே, எங்கள் குடும்பத்தை புறக்கணிக்கக் கூடாது.
''ஹிமாச்சல் காங்., தலைவராக எனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளேன்; முதல்வராகவும் சிறப்பாக செயல்படுவேன்,'' என்றார்.
முதல்வருக்கான போட்டியில் உள்ள மற்ற தலைவர்களும், தங்கள் முடிவில் உறுதியாக இருப்பதால், அடுத்த முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரசில் இழுபறி நிலவுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement