வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லோக்சபாவில் மத்திய அமைச்சருக்கு மிகுந்த முக மலர்ச்சியுடன் வாயார புகழாரம் செய்தது, ராஜ்யசபாவில் திடீரென கிளம்பிய மேகதாது அணை விவகாரத்தின்போது பலத்த அமைதி காத்தது என, பார்லிமென்டின் இரு சபைகளிலும், தி.மு.க., - எம்.பி.,க்களின் நேற்றைய செயல்பாடு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
![]()
|
லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின்போது, தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு பேசியதாவது:
உலகம் முழுதும் கொரோனா எனும் கொடிய தொற்று நோய் அச்சுறுத்திக் கொண்டிருந்தது. அப்போது, நம் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா சிறப்பான நடவடிக்கைகளை எடுத்தார்.
புதிய ஒப்புதல்
அந்த நோயை தமிழகம் கட்டுப்படுத்தியது என்றால், அது என் நண்பரான அமைச்சரின் உதவியால் மட்டுமே சாத்தியமானது. எப்போதெல்லாம் முதல்வர் கடிதம் எழுதுகிறாரோ, அப்போதெல்லாம் உதவிகளை செய்தவர் அமைச்சர்.
உடனடி நடவடிக்கைகள் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை டேங்கர் லாரிகள், ரயில்கள் வாயிலாக உடனடியாக அனுப்பி வைத்தார். அதனால் தான் கொரோனாவிலிருந்து தமிழக மக்கள் காப்பாற்றப்பட்டனர்.
இருப்பினும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் மட்டுமே வெற்றிகரமாக கட்டப்பட்டுள்ளது; நிலம் காலியாக கிடக்கிறது. எப்போது தான் அங்கு கட்டடம் கட்டி முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதற்கு, அமைச்சர் மன்சுக் மாண்டவியா அளித்த பதில்:
கொரோனா காலம் மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் கட்டடம் கட்டும் பணி தாமதமாக விட்டது. இதனால், வடிவமைப்பு மாறி, திட்டச் செலவும் அதிகரித்துவிட்டது.
புதிய ஒப்புதல் பெறப்பட்டு, ஒப்பந்தம் கோரும் பணியை நிர்வாகக்குழு விரைவில் துவங்கும். இந்த விஷயத்தை பாலு போன்றவர்கள் அரசியலாக்க வேண்டாம்.
தமிழக மருத்துவ மாணவர்களுக்கான தன் கடமையை மத்திய அரசு நிச்சயம் நிறைவேற்றும். யாரும் கவலைப்பட வேண்டாம். அதன் பட்ஜெட்டும் 1,200 கோடியில் இருந்து, 1,900 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜ்யசபாவில் ஜீரோ நேரத்தின்போது முன்னாள் பிரதமர் தேவகவுடா பேசியதாவது:
குடிநீர் தட்டுப்பாடு கர்நாடகாவின் பெரிய பிரச்னையாக உள்ளது. நிலத்தடி நீர் மட்டும் குறைந்து கொண்டே போகிறது. மேகதாது அணை கட்டும் பிரச்னை மிகவும் முக்கியமானது. பிறர் இடத்தை ஆக்கிரமிக்காமல் எங்கள் சொந்த நிலத்தில் கட்டுகிறோம்.
இவ்வாறு அவர் பேசியபோது, ஆவேசமாக குறுக்கிட்ட ம.தி.மு.க., - எம்.பி., வைகோ, ''மேகதாது அணை கட்டினால், மிகவும் பாதிக்கப்படப் போவது தமிழகம் தான். அப்பிரச்னையை இங்கு கிளப்பக் கூடாது,'' என்றார்.
அதற்கு தேவகவுடா, ''இது குறித்து எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்கதயார். சிறிய அணை தான்; ஆனாலும், எதிர்க்கின்றனர்,'' என்றார்.
மீண்டும் வைகோ எதிர்ப்பு தெரிவித்தபடி நிற்க, சபையில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது சபையில், தி.மு.க., - எம்.பி.,க்கள் வில்சன், ராஜேஷ்குமார், சண்முகம், அப்துல்லா என பலர் இருந்தும், எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் காத்தனர்.
அலுவல்கள் துவங்கும்போது சபையில் இருந்த எம்.பி., சிவா, சரியாக தேவகவுடா பேசும்போது மட்டும் சபையில் இல்லை. இந்த சலசலப்பு முடிந்து கேள்வி நேரம் துவங்கியதும், சபைக்குள் வந்து சேர்ந்தார்.
![]()
|
இது குறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:
தனக்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தே.ஜ., கூட்டணி ஆட்சியின்போது, வாஜ்பாய் அரசில் இடம்பெற்று இருந்ததை பாலு நினைவுபடுத்த தவறவே மாட்டார்.
காரணம், அரசியல் காற்று எந்த பக்கம் அடிக்கும் என்று யாருக்கும் தெரியாது.
மூத்த எம்.பி.,யான பாலுவுக்கு இது தெரியும். இது தான், பா.ஜ., மற்றும் மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயலில் துவங்கி, சபாநாயகர் ஓம் பிர்லா வரை, சபைக்குள் மனம் குளிரும் வகையில் பாலு பேசுவதற்கு காரணம்.
- நமது டில்லி நிருபர் -