வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இந்திய நிகழ்வுகள்
அசாமில் ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்
திபு,-அசாமில் இரண்டு சரக்கு வாகனங்களில் கடத்தி வரப்பட்ட, 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், மூவரை கைது செய்தனர்.
வட கிழக்கு மாநிலமான அசாமின் கார்பி அங்லாங் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அசாம் - நாகாலாந்து எல்லையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்திற்கிடமான இரண்டு சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
இதில், நாகாலாந்து, மாநில பதிவு எண் கொண்ட ஒரு வாகனத்தில், 30 ஆயிரம் போதை மாத்திரைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர்.
மணிப்பூர் பதிவெண் கொண்ட மற்றொரு வாகனத்தில், 757 கிராம் ஹெராயின் போதைப் பொருளைசோப்பு டப்பாக்களில் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இரண்டு வாகனங்களில் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு 7 கோடி ரூபாய்.
இந்த கடத்தலில் தொடர்புடைய மூவரை போலீசார் கைது செய்ததுடன், கடத்தலுக்காக பயன்படுத்திய இரு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
தமிழக நிகழ்வுகள்
மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: இரு வாலிபர்கள் சிக்கினர்
பல்லடம்:பல்லடம் அருகேயுள்ள நொச்சிபாளையத்தை சேர்ந்தவர் சுரேந்தர், 23; அறிவொளி நகரை சேர்ந்த ராஜா முகமது, 38. இருவரும், -உடுமலை ரோடு, கேத்தனுார் அருகே நின்று கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் சந்தேகமடைந்து இருவரிடமும் விசாரித்தனர்.
அதில், பள்ளி மாணவர்களுக்கு சப்ளை செய்ய வேண்டி பதுக்கி வைத்திருந்த, 1.200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.
![]()
|
கஞ்சா விற்றவர் கைது
வீரபாண்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நொச்சிபாளையம் பிரிவு அருகே ஏ.பி., நகரில் சந்தேகப்படும் விதமாக முதியவர் ஒருவர் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதிக்கு சென்ற போலீசார், முதியவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் பல்லடத்தை சேர்ந்த அப்துல்ரசாக், 68 என்பதும், பனியன் தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவிலில் திருட்டு
காங்கயம், காடையூரில் மண்ட காஞ்ச கருப்பணசாமி கோவில் உள்ளது. நேற்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள், கோவிலின் பூட்டு உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின், கோவில் உள்ளே சென்று பார்த்த போது, கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம், நகை திருடு போனது தெரிந்தது. உண்டியலில் இருந்த, 20 ஆயிரம் ரூபாய், அரை சவரன் நகை திருடு போனது. தகவலின் பேரில், காங்கயம் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரித்தனர். 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டு, மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஆன்லைன் வர்த்தக மோசடி: ஒருவர் கைது
திருப்பூர்,;திருப்பூர், பொல்லிகாளிபாளையத்தை சேர்ந்தவர் யாசர் அராபத், 33; இவரது இரு நண்பர்கள், ஆன்லைன் டிரேடிங் பற்றி, இவரிடம் விளக்கியுள்ளனர்.
![]()
|
யாசர் அராபத் மற்றும் இரு நண்பர்கள், மொபைல் போன் லிங்க் வாயிலாக பணம் அனுப்பியுள்ளனர். மொத்தம் 5 லட்சத்து, 39 ஆயிரத்து 403 ரூபாய் கமிஷனாக இவர்களுக்கு வர வேண்டியிருந்தது.
ஆனால், மேலும், 1 லட்சத்து, 38 ஆயிரம் ரூபாய் இவர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. மூவரும் தாங்கள் ஏமாற்றப்படுவதை அறிந்து, திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.
மொபைல்போன், வங்கி கணக்கு விவரங்களின் அடிப்படையில் விசாரித்து, ராணிப்பேட்டை, வசந்தம் அவென்யூவை சேர்ந்த சந்தோஷ்குமார், 54 என்பவர் மோசடி செய்தது தெரியவந்தது. சந்தோஷ்குமாரை கைது செய்து, வங்கி கணக்கை முடக்கினர்.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்ட சைபர் கிரைம், போலீஸ் தனிப்படையை எஸ்.பி., செஷாங்சாய் பாராட்டினார்.
கொலை மிரட்டல்
பல்லடம்;கோவை, சாய்பாபா காலனியை சேர்ந்த சுந்தர்ராஜன், 70, என்பவர், பல்லடம் போலீசில் அளித்த புகார் மனு:
கணபதிபாளையத்தை சேர்ந்த ராமன் என்பவரிடம் பவர் பெற்று அவரது வீட்டு மனைகளை விற்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
என்னிடம் அறிமுகமான, ஈரோட்டை சேர்ந்த ஒருவர்(பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது), தன்னிடம் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளதாகவும், மனைகளை விற்று தருவதாகவும் கூறினார்.
இதற்காக பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு பலரையும் ஏமாற்றுவதாக தெரிந்தது. இதனால், சைட்டுக்குள் வரவேண்டாம் என அவரிடம் கூறினேன்.
அவர் அனுப்பியதாக கூறி, பைக்கில் வந்த, 20க்கும் மேற்பட்டோர் என்னிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
புகார் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார், கணபதிபாளையத்தை சேர்ந்த தேவராஜ் 28, அசோகன் 30, சுரேஷ் 27, அன்பு ரமேஷ் 35 உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வீடு புகுந்து திருட்டு : 38 பவுன் நகைகள் மீட்பு
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, நஞ்சேகவுண்டன்புதுாரில் சந்திரா, 40, என்பவர், கடந்த, ஜூலை 10ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் பழநி சென்றார்.
இரு நாட்களுக்கு பின், 12ம் தேதி வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து, வடக்கிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சந்திரா தகவல் தெரிவித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கண்டுபிடிக்க, எஸ்.பி., பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி கூடுதல் எஸ்.பி., பிருந்தா, தலைமையில் தனிப்படை அமைத்தனர்.
விசாரணையில், நகைகளை கொள்ளை அடித்து சென்றது, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவரது மகன் ராஜசேகர், 28, என்பது தெரியவந்தது. நேற்று, அவரை கைது செய்து, 38.5 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர