தியாகதுருகம்: அடரி - திருவண்ணாமலை சாலை விரிவாக்கப் பணியின் போது வெட்டப்படும் மரங்களுக்கு பதில் புதிய மரக்கன்றுகளை நட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
திருவண்ணாமலையில் இருந்து தியாகதுருகம் வழியே திருச்சி செல்லும் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக திருவண்ணாமலையில் இருந்து அடரி வரை 89 கி.மீ., துாரத்திற்கு 21 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாலை விரிவாக்கத்திற்கு பின் திருவண்ணாமலையில் இருந்து திருச்சிக்கு குறுகிய நேரத்திற்குள் செல்ல இவ்வழித்தடம் பயன்படும். இதற்காக சாலையின் இருபுறமும் தலா ஒன்றரை மீட்டர் அகலத்திற்கு பள்ளம் எடுத்து ஜல்லிகள் போட்டு, தார் சாலை அமைக்கப்படுகிறது.
இதற்கு இடையூறாக சாலையோரம் உள்ள 70 ஆண்டு பழமையான புளிய மரங்கள் வேரோடு வெட்டி, அகற்றப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்கத்திற்காக இதுவரை 100க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் கோடை காலங்களில் இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். இச்சாலையில் அருகருகே மரங்கள் வளர்ந்து நிழல் தந்தன. தற்போது ஆங்காங்கே மரங்கள் வெட்டப்பட்ட நிலையில் வெட்ட வெளியாக காட்சியளிக்கிறது.
எனவே, சாலைப் பணிகள் முடியும் வரை காத்திடாமல் தற்போது மழைக்காலம் என்பதால், வெட்டப் பட்ட மரங்களுக்கு பதில், சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.