சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த சோனியா பிறந்த நாள் விழாவை, கோஷ்டி தலைவர்கள் புறக்கணித்தனர்.
காங்., முன்னாள் தலைவர் சோனியாவின், 76வது பிறந்த நாளை, காங்கிரசார் நேற்று கொண்டாடினர். சென்னையில், காங்., கட்சி மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், 'சோனியா படைத்த சாதனைகளும், சந்தித்த சவால்களும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
இதில் சட்டசபை காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி போன்றவர்கள் பங்கேற்பதாக அழைப்பிதழில் கூறப்பட்டுள்ளது. ஆனால், நவ., 15ல் சத்தியமூர்த்தி பவனில் பொருளாளர் ரூபி மனோகரன் ஆதரவாளர்களுக்கும், தமிழக காங்., தலைவர் அழகிரி ஆதரவாளர்களுக்கும் இடையே, அடிதடி சண்டை நடந்தது.
அதன்பின், சத்தியமூர்த்தி பவனில் அழகிரி தரப்பினர் நடத்தும் நிகழ்ச்சிகளை, அனைத்து கோஷ்டி தலைவர்களும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். அந்த வரிசையில், நேற்று நடந்த சோனியா பிறந்த நாள் நிகழ்ச்சியையும் புறக்கணித்தனர். ஆனால், தங்கள் ஆதரவாளர்கள் நடத்திய நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்றனர்.
- நமது நிருபர் -