வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தமிழக பா.ஜ., சிந்தனையாளர் பிரிவு சார்பில் 'தமிழ்நாடு உரையாடல் - 2022' சிறப்பு நிகழ்ச்சி, 'திராவிட மாடலில் போலி பகுத்தறிவுவாதம்' தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் நடந்தது.
நிகழ்ச்சியில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது: பா.ஜ., தேசிய கட்சியாக இருந்து, மாநிலங்களுக்கு இடையில் நிலவும் பிரச்னையை முடித்து வைக்கிறது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின், காவிரி நீர் பிரச்னை முறைப்படுத்தப்பட்டது. இதனால், தற்போது பிரச்னை ஏற்படுவதில்லை.1967ல் இருந்து கல்வி கொள்கையில் மூன்றாவது மொழியாக ஹிந்தி இருந்தது. ஆனால், பிரதமர் மோடி தான் தாய் மொழியில் கட்டாயம் படிக்க வழி செய்துள்ளார்.
நாடு முழுதும் ஏழு ஆண்டுகளில், 84 ஆயிரத்து 500 தொழில் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. அதில் தமிழகத்தில் 5.5 சதவீதம் மட்டும் தான் வந்துள்ளன. குறைந்த மொழிகள் பேசுவதே காரணம். கடந்த 2010 - 11ல் சொந்த வரி வருவாயில், மஹாராஷ்டிரா முதலிடத்தில் இருந்தது. இரண்டாவது இடத்தில் தமிழகம் இருந்தது. தற்போது, 12 ஆண்டுகளுக்கு பின், முதலிடத்தில் மஹாராஷ்டிரா உள்ளது. இரண்டாவது இடத்தில், உ.பி., உள்ளது. தமிழகம் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.

உ.பி.,யின் வளர்ச்சி, 268 சதவீதம் அதிகரித்திருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சி குறைந்து வருகிறது. மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழும், அடிப்படை கணக்கு கூட தெரிவதில்லை. கல்வி துறையை, கரையான் அரிக்கிறது. தமிழகத்தில் உள்ள, 70 சதவீத இன்ஜினியரிங் கல்லுாரிகளை, அரசியல்வாதிகள் தான் நடத்துகின்றனர்; அதனால், தரமாக சொல்லி கொடுக்கவில்லை. இன்ஜினியரிங் படித்தவர்கள் சிரமப்படுகின்றனர்.
பா.ஜ.,வின் மத்திய அமைச்சரவையிலும், ஆளும் மாநிலங்களிலும் திறமையானவர்களே அமைச்சர்களாகி வருகின்றனர் என்றார். பின் நடந்த குழு உரையாடலில், ஊடகவியலாளர்கள் ஜே.வி.சி.ஸ்ரீராம், ராஜவேல் நாகராஜன், ஸ்ரீகாந்த், சீனிவாசன், கார்த்திக் கோபிநாத், சினிமா இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், ஆடிட்டர் ஸ்ரீராம் சேஷாத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.