வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மாண்டஸ் புயல் கரையை கடந்த போது சென்னையில் 300 மரங்கள் சாய்ந்தன. சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. மின்சாரம் தாக்கி மடிப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூரில் 4 பேர் பலியாகினர். சென்னை, செங்கல்பட்டில் மட்டும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் பஸ் போக்குவரத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லை. கிழக்கு கடற்கரை சாலையிலும் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இரவு 11 மணி முதல் கோவளம் , மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
பெசன்ட் நகர்:
சென்னையை பெசன்ட் நகரில் மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது, 75.கி.மீ வேகத்தில் காற்று வீசியது. நேற்று துவக்கிய, கடல் சீற்றம், இன்று(டிச.,10) காலை வரை, குறையவில்லை.

சேதம்:
கடற்கரை அருகில் இயங்கி வந்த, கடைகள் முற்றிலும் நாசமாகியுள்ளன. காற்றின் காரணமாக, கடற்கரை மணல் எல்லாம் சாலையில் வந்து தேங்கியது. அதேபோல், பெசன்ட் நகர் கடற்கரை நடைபாதை மணல் திட்டுக்களாய் மாறியுள்ளன. இதனால் பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. பெசன்ட் நகர் ஊரூர் குப்பம் பகுதியில் மீனவர் குடியிருப்பில் மழைநீர் உட்புகுந்தது.
சென்னை மாநகராட்சி கமிஷ்னர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில்: சென்னையில் மாண்டஸ் புயல் காரணமாக 300-350 மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. முறிந்த மரங்களை அகற்றும் பணியில் காலை முதல் 30,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலைக்குள் அனைத்தும் மரங்களும் அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மெரினா கடற்கரை:
மெரினா கடற்கரை அலைகளின் சீற்றம் காற்றின் வேகம் குறையவில்லை. மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. நான்கு முதல் ஐந்து மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் ஆர்ப்பரிப்பது.

மீனவர்கள் படகுகள் பலத்த காற்றால் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளன. மீன் வலைகள், மோட்டார் இன்ஜின்கள் முழுவதும் மணலால் மூடப்பட்டுள்ளது.
மாமல்லபுரம்:
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், மாண்டஸ் புயல் கரையை கடந்த போது, பலத்த காற்று வீசியது. மாண்டஸ் புயலானது இரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மாமல்லபுரத்தில் பெரும் பாதிப்பு இல்லை . தேவநேரி ரோடு கான்கிரீட் பகுதி இடிந்து விழுந்தது. நாகப்பட்டினம் ,காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கடலூரில் பெரும் பாதிப்பு ஏதும் இல்லை.
நாகையில் வெயில் துவங்கியது
நாகையை பொறுத்தவரை நேற்று மாலையில் மழை நின்றது. இன்று காலை முதல் வெயில் அடிக்க துவங்கியது. அதிகாலையில் குளிர் இருந்தது. கடந்த காலத்தில் கஜா, நிஷா, வர்தா புயலில் நாகையில் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆனால் இந்த மாண்டஸ் புயலில் எவ்வித பாதிப்பும் இல்லை.

கோவளம்:
மாமல்லபுரத்தை யொட்டிய கோவளம் பகுதியில்தான் புயல் கரையை முழுவதுமாக தொட்டபடி கரையை கடந்தது. கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள், முற்றிலும் சேதமடைந்துள்ளன. மீனவர்களின் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளன. அதேபோல் வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
விழுப்புரம் பகுதி
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., பாண்டியன், மாவட் எஸ்.பி., ஸ்ரீநாதா உள்ளிட்ட அதிகாரிகள் மாண்டஸ் புயல் பாதிக்கப்பட்ட மரக்காணம் பகுதியில் உள்ள 19 மீனவ கிராமங்களில் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இன்று காலை கலெக்டர் மோகன் பேட்டி :
மாண்டஸ் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஐந்து இடங்களில் 13 மரங்கள் விழுந்தன, அதனையும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து தடை இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. மேலும் மாவட்டம் முழுவதும் வேறு ஏதாவது பாதிப்பு உள்ளதா என்பது குறித்து கணக்கெடுப்பு செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பிள்ளை சாவடி பகுதிகளில். ரூ. 14 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான பணி, மழை காரணமாக தாமதம் ஆகின. நாளை முதல் அந்த பணி துவங்கும் என தெரிவித்தார்.
இந்திய வானிலை ஆய்வு மையம்:
இந்த நிலையில், மாமல்லபுரம் அருகே கரையை கடந்த 'மாண்டஸ் புயல்' ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்தது. இன்று மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து பிற்பகலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.