சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள, 'மாண்டஸ்' புயல் பாதிப்பால் ஏற்படும் நோய்களில் இருந்து, தற்காத்து கொள்ள, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறியதாவது:
மழை காலங்களில், தேள், பாம்பு உள்ளிட்ட உயிரியினங்கள் வீடுகளுக்குள் வர அதிக வாய்ப்பு உள்ளதால், நீர்நிலை ஓரங்களில் வசிப்போர், அதிக கவனமுடன் இருக்க வேண்டும். முதியோர், ஆஸ்துமா பிரச்னை இருப்போர், வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்புடன்இருக்க வேண்டும். சூடான உணவை உண்ண வேண்டும். ஹோட்டல் உணவை தவிர்க்க வேண்டும்.
அதேபோல், வைரஸ் மற்றும் 'ப்ளூ' காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தண்ணீரால் மஞ்சள் காமாலை, டைப்பாய்டு, எலி காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, குடிநீரை நன்கு காய்ச்சி பருக வேண்டும்.
டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா ஆகிய பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நல பாதிப்புகள் ஏற்படுவோர், உடனடியாக மருத்துவமனைகளுக்கு சென்று, சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.