சேலம்: தமிழகத்தில், 21 அரசு மருத்துவ கல்லுாரிகளில், ஆர்.எம்.ஓ., எனும் உள்தங்கும் மருத்துவ அலுவலர் இல்லாததால், மருத்துவமனை செயல்பாடுகள் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்பட, 8 மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்துகின்றனர்.
தினமும், 4,000க்கும் மேற்பட்ட வெளிப்புற நோயாளிகள்; 2,500க்கும் மேற்பட்ட உள்புற நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இதனால், 24 மணி நேரமும் அங்கு மக்கள் நடமாட்டம் இருக்கும்.
அதனால் மருத்துவமனையை வழிநடத்தும் தலையாய பணி, ஆர்.எம்.ஓ.,வுக்கு உண்டு.
![]()
|
குறிப்பாக, சுகாதாரம், துாய்மைப்பணி, மருத்துவர் முதல் கடைநிலை ஊழியர் வரை, அவர்கள் வருகையை உறுதிப்படுத்தி வருகைப்பதிவேட்டை கையாளுதல், தற்செயல் விடுப்பு உள்ளிட்டவைக்கு ஒப்புதல் அளித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு, டீனுக்கு அடுத்து மருத்துவமனையை முழுமையாக வழிநடத்தும் கடமை, ஆர்.எம்.ஓ.,வுக்கு உண்டு.
ஆனால், சேலத்தில் டீன் வள்ளி மாற்றப்பட்ட நிலையில், பொறுப்பு ஆர்.எம்.ஓ.,வாக பணியாற்றிய குழந்தைகள் சிகிச்சை துறை தலைவர் சம்பத்குமார், ஆர்.எம்.ஓ., பதவியில் இருந்து விலகியதால் அப்பதவி காலியாக உள்ளது.
இதனால் அப்பணியை கூடுதல் ஆர்.எம்.ஓ., வினோத்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு பணிச்சுமை அதிகமாகி நிர்வாக நடவடிக்கையில் சிக்கல் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சம்பத்குமார் கூறுகையில், ''ஆர்.எம்.ஓ., என்பது டென்ஷனான பணி. ஓராண்டு முடிந்ததால் அப்பணியில் இருந்து விலகிவிட்டேன்,'' என்றார்.
மருத்துவர்கள் கூறிய தாவது: ஆர்.எம்.ஓ., பணி என்பது மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்துக்குள் தங்கி, 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டியது. ஆனால் சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், ஆர்.எம்.ஓ.,வுக்கு குடியிருப்பு வசதி இல்லை.
இதுகுறித்து அரசுக்கு பலமுறை தெரிவித்தும் பலனில்லை. தமிழகத்தில், 21 அரசு மருத்துவ கல்லுாரிகளில், ஆர்.எம்.ஓ., பணியிடம் காலியாக உள்ளதால் மருத்துவமனை செயல்பாடு என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
9 உதவி ஆர்.எம்.ஓ., காலி
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் பெருமாள்பிள்ளை கூறியதாவது:
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், ஆர்.எம்.ஓ., பணியிடம் மிக முக்கியமானது.
கலந்தாய்வு மூலம், 21 ஆர்.எம்.ஓ., பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும். அதேபோல் உதவி ஆர்.எம்.ஓ., ஒன்பது பேர் பணியிடமும் காலியாக உள்ளது. அரசு மருத்துவ கல்லுாரிகளில் இடமில்லையென கூறி ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கு அனுப்பிய, எம்.டி., படித்தவர்களை, உதவி ஆர்.எம்.ஓ., பணி கலந்தாய்வுக்கு அழைக்க வேண்டும்.
சென்னை அரசு பல் மருத்துவ கல்லுாரியில், ஏழு ஆண்டாக பேராசிரியர் பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.
ஆசிய அளவில் புகழ் பெற்ற சென்னை, கீழ்பாக்கம் மனநல மருத்துவ கல்லுாரிக்கு, மூன்று ஆண்டாக இயக்குனர் பணியிடம் நிரப்பாமல் இருப்பது மருத்துவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.