சென்னை: '' மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை'' , முன்கூட்டியே கவனமாக செயல்பட்டதால் பெரும் சேதத்தை அரசு தடுத்துள்ளது. என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில், திருவான்மியூர் பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம் , கொட்டிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து சென்று ஆய்வு செய்ததுடன், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பொது மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார். மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். காசிமேட்டில் சேதமடைந்த படகுகளையும் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், மிகப்பெரிய மாண்டஸ் புயல் பாதிப்பில் இருந்து தமிழகம், முக்கியமாக சென்னை மீண்டுள்ளது. அரசு நடவடிக்கை, செயல்பாடு காரணமாக மக்கள் பாதிக்கப்படவில்லை. புயலால் குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு பெரியளவில் பாதிப்பு இல்லை.
போக்குவரத்திற்கு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டது. அதனை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்படி சூழல் அமையும் என்ற எதிர்பார்த்து, முன்கூட்டியே அரசு திட்டமிட்டு செயல்பட்டனர்.

சென்னையில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமினம் செய்யப்பட்டு அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 25 ஆயிரம் பணியாளர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.மாண்டஸ் புயல் 11;30 மணியில் இருந்து 1:30 மணி வரை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. அப்போது 70 கி.மீ., காற்று வீசியது. இது ராணிப்பேட்டை கடந்து சென்று கொண்டுள்ளது. இதனால், வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 37 மாவட்டத்தில் மழை பெய்தது. மாநில சராசரி 20.08 மி.மீ.,. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. அதிக மழை பெய்தாலும், பெருமளவு சேதம் ஏற்படாமல் அரசு தடுத்துள்ளது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 121 குடிசைகள் சேதமடைந்துள்ளது. மற்ற சேத விவரங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அதில்,, 9,130 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 201 முகாம்கள் தங்க வைக்க அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 70 கி.மீ., வீசிய புயல் காரணமாக 400 மரங்கள் விழுந்துள்ளன. 160 மரங்கள் தெருவிளக்குகள் மீது சாய்ந்துள்ளன. நேற்று 900 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது 300 மோட்டார்கள் செயல்படுகின்றன. 22 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை. இதனால், போக்குவரத்து சீராக உள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மீட்பு பணிகள் துரிதமாக நடக்கிறது.
பல இடங்களில் மின்கம்பங்கள், மின்கடத்திகள் சேதமடைந்தன. மக்கள் பாதுகாப்பு கருதி 600 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 300 இடங்கள் சீர் செய்யப்பட்ட நிலையில், மற்ற இடங்களில் பணிகள் நடக்கிறது. எந்த புயலையும் இந்த அரசு எதிர்கொள்ளும் என்பதை இந்த அரசு நிரூபித்து காட்டி உள்ளது. தேவைப்பட்டால், மத்திய அரசிடம் உதவி கேட்போம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
இதனை தொடர்ந்து, தலைமை செயலகத்தில் மாண்டஸ் புயல் பாதிப்பு, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்தும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தினார்.