வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: டிச.12ம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் சிலர் மதுரையில் ரஜினியை வள்ளுவராக்கி காவி உடையை அணிய வைத்து, குடுமி, தாடியுடன் இருப்பது போல் போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பியுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர். அடிக்கடி இமயமலை சென்று தியானம் செய்பவர். பலமுறை ஆன்மிகம் பற்றி பொது மேடைகளில் பேசியவர். இதனால், மூன்று ஆண்டுகளுக்கு முன் ரஜினி பாஜ., கட்சியில் சேர்வார் என்று பரவலாக பேசப்பட்டது. பாஜ., கட்சியும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாக தகவல்கள் வந்தன.

அப்போது, ‛‛நீங்கள் பாஜ.,வில் சேரப்போவதாக கூறப்படுகிறதே'' என்று ஒரு நிருபர் கேட்ட போது பதிலளித்த ரஜினி, ''பாஜ., நிறத்தை என் மீது பூசப்பார்க்கிறார்கள். வள்ளுவர் மீதும் அதே போல் பூசப்பார்க்கிறார்கள். நானும் மாட்ட மாட்டேன். வள்ளுவரும் மாட்ட மாட்டார்'' என்று கூறிவிட்டு தனக்கே உரித்தான 'ஹா... ஹா... ஹா...' என ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு இடத்தை காலி செய்தார்.
ரஜினி அப்போதே தெளிவுபடுத்திய ஒரு விஷயத்தை, அவரது ரசிகர்கள் மீண்டும் கையில் எடுத்துள்ளனர். அவரது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் 'முளைத்த' சில போஸ்டர்களில், 'வாழும் வள்ளுவரே' என்று ரஜினியை குறிப்பிட்டு காவி உடையிலும், தாடி, கொண்டையுடனும் போட்டோவை மாற்றி ரஜினியை வள்ளுவராக்கி அச்சிட்டுள்ளனர்.இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி குறிப்பிட்ட ரஜினி ரசிகர்கள், ''எங்கள் தலைவரை (ரஜினி) நாங்கள் ஒரு ஆன்மிகவாதியாகவும் பார்க்கிறோம். அதனால், தான் அவருக்கு காவி உடை அணிவித்து நெற்றியிலும் விபூதி பட்டையடித்து குங்குமம் வைத்துள்ளோம். இதில் , எந்த தவறும் இருப்பதாக எங்களுக்கு தோன்றவில்லை''. இவ்வாறு அவர்கள் கூறினர்.