ஓசூர்: கர்நாடகா மாநிலத்திற்கு, 60க்கும் மேற்பட்ட யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், யானைகள் சாலையை கடந்து சென்றதால், வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனச்சரகம், சானமாவு காப்புக்காட்டில், 76க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டிருந்த நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் பயிர்கள் நாசமாகி வந்தன. இதனால், நேற்று காலை, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
அப்போது, 16 யானைகள் மட்டும் தனியாக பிரிந்து, சானமாவு காப்புக்காட்டிலேயே முகாமிட்டன. மீதமுள்ள, 60க்கும் மேற்பட்ட யானைகள், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் உள்ள கஸ்பா காப்புக்காட்டிற்கு விரட்டப்பட்டன.
அங்கிருந்து, கர்நாடகா மாநிலத்திற்கு யானைகளை விரட்டும் பணியில், தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் மற்றும் 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர், நேற்று முன்தினம் இரவு, ஈடுபட்டனர்.
அப்போது, மரகட்டா கிராமம் அருகே, தேன்கனிக்கோட்டை - அய்யூர் சாலையை கடந்த யானைகள் கூட்டம், நொகனுார் காப்புக்காட்டிற்கு சென்றன. இதனால், சாலையின் இருபுறமும் சிறிது நேரம் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. யானைகள் சாலையை கடந்த பின், வாகன போக்குவரத்து சீரானது.
நொகனுாரில் முகாமிட்டுள்ள யானைகளை, நேற்றிரவு உச்சனப்பள்ளி, ஜவளகிரி வழியாக, கர்நாடகா மாநிலத்திற்கு விரட்டும் பணி தொடர்ந்து நடந்தது.