சென்னை: கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேற்று(டிச.09) தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த 'மாண்டஸ்' புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து வட மாவட்டங்களில் நிலவுகிறது.
இன்று(டிச.,10)
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை(டிச.11)
தமிழகம்புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேகஇடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் டிச.,12 மற்றும் 13ல் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், டிச.,14ல் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
இன்று(டிச.,10) வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அவ்வபோது பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்,
அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சிய் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சிய் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 - 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று(டிச.,10) வட மாவட்டங்கள், புதுச்சேரி கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும்.
டிச.,12 மற்றும் 13ல் லட்சத்தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும்,
டிச.,14ல் தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்.