சென்னை: சென்னையில் புயல் பாதிப்புகளை பார்வையிட சென்று திரும்பிய முதல்வர் ஸ்டாலின் கான்வாயில் சென்னை மேயர் பிரியா மற்றும் கமிஷனர் ககன்தீப் சிங் தொங்கியபடி பயணித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மாமல்லபுரம் அருகே நேற்று நள்ளிரவு கரையை கடந்த மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த ஸ்டாலின், மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பிறகு காசிமேடு சென்று மீனவ கிராமங்களை பார்வையிட்டதுடன், சேதமடைந்த படகுகளையும் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, எம்.பி., கலாநிதி, சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங், அதிகாரிகள் உடன் சென்றனர். பிறகு பத்திரிகையாளர்களையும் சந்தித்த ஸ்டாலின், அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.
இதனை தொடர்ந்து ஸ்டாலின் அங்கிருந்து காரில் கிளம்பினார். அப்போது முன்னே சென்ற கான்வாயில் பிரியா தொங்கியபடி பயணித்தார். அவருக்கு பின்னால், கமிஷனர் ககன்தீப் சிங்கும் கான்வாயில் ஏறி தொங்கியபடி பயணம் செய்தார். இதனை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் படம் பிடித்தனர்.

அதனை பார்த்த பிரியா முகத்தை மூடி கொண்டார். இது குறித்த படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.