வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, உ.பி., காசியில் உள்ள அவரது உருவ சிலைக்கு, இன்று(டிச.,11) மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1882 டிச., 11 ல் சின்னச்சாமி ஐயர் - லட்சுமி அம்மையார் தம்பதிக்கு மகனாக அவதரித்தார் மகாகவி பாரதியார். பெற்றோர் அவருக்கு இட்டபெயர் சுப்ரமணி. ஆனால் 11ஆவது வயதில் கவிபாடும் ஆற்றலினால், எட்டயபுரம் மன்னரால் பாரதி என்ற சிறப்புப் பெயர் பெற்றார். அன்று முதல் சுப்பிரமணிய பாரதி என அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தி: போற்றுதலுக்குரிய சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாள் அன்று அவருக்கு தலைவணங்குகிறேன். அபாரமான துணிச்சல் மற்றும் தலைசிறந்த அறிவு கூர்மையின் எடுத்துக்காட்டாக மகாகவி பாரதியார் விளங்கினார். இந்தியாவின் முன்னேற்றம் குறித்தும், ஒவ்வொரு இந்தியரின் வளர்ச்சி குறித்தும் அவர் மாபெரும் கனவு கண்டார். பல்வேறு துறைகளில் அவரது கனவுகளை நிறைவேற்ற நாம் பாடுபட்டு வருகிறோம்

உ.பி., காசியில் உள்ள அவரது உருவ சிலைக்கு, இன்று(டிச.,11) மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்பு, வாரணாசியில் உள்ள பாரதியாரின் பேரன் கே.வி. கிருஷ்ணன் வீட்டுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சென்றார். இதையடுத்து அவருக்கு பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றார்.

பின்னர் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளான இன்று, காசியில் அவரது குடும்பத்தினரைச் சந்திக்கும் பேறு கிட்டியது. அவரது உறவினர் கே. வி. கிருஷ்ணனிடம் ஆசீர்வாதமும், ஊக்கமும் பெற்றதில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாரதியாருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா வெளியிட்ட வாழ்த்து செய்தி:
நமக்கு தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல்; இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல். “எந்தநாளும் உன்மேல்—தாயே இசைகள் பாடி வாழ்வேன்.” இன்று(நவ.,11) பாரதியார் பிறந்த தினம் வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் எல். முருகன் வெளியிட்ட வாழ்த்து செய்தி:
பாட்டு திறத்தாலே இவ்வையகத்தை பாலித்திட வேண்டும்”என்று எழுச்சியோடு கவி புனைந்து தமிழ் மொழிக்கு அருந்தொண்டாற்றி தமிழ் உணர்வையும்,விடுதலை உணர்வையும் மக்கள் மனதில் தனது எழுத்துக்களால் விதைத்த மகாகவி பாரதியார் பிறந்த தினத்தில் வணங்குவோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மகாகவி பாரதியார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வாழ்த்து செய்தி:
பெண்ணுரிமைக்காக போராடிய பன்மொழி புலமை கொண்ட 20ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் கவிஞர் பாரதி. சுடர் மிகு அறிவுடன் சுதந்திரப் பயிருக்கு தன் எழுத்துக்களால் உயிரூட்டிய சுதந்திரப் போராட்ட வீரர் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த தினத்தில், அவரின் தேசிய சிந்தனைகளை போற்றி வணங்குவோம் எனக் கூறியுள்ளார்.