அமெரிக்காவின் மெசச்சுஸஸ்ட் மாகாணத்தில் உள்ள வோர்செஸ்டர் பல்கலை., 1865 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் மூத்த பொறியியல் பல்கலை.,களுள் ஒன்றான இது, கடந்து நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பலவித பொறியியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ரோபோ தொழில்நுட்பத்தில் இந்தப் பல்கலை., மாணவர்கள் மேற்கொள்ளும் ஆய்வு அதிக வரவேற்பு பெற்றுள்ளது.
நான்கு சக்கரங்கள் பொருத்திய ரோபோக்கள் காலாகாலமாக மனிதர்களின் தேவைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாட்டு வண்டியில் வண்டியுடன் கட்டப்பட்ட மாடுகள் பொதி சுமந்து இழுத்துச் செல்வதுபோல நான்கு சக்கரங்கள் கொண்ட ரோபோக்கள் உதவியுடன் பல நாடுகளில் கனரக இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் இழுத்துச் செல்லப்படுகின்றன.
இந்த சக்கர ரோபோக்கள் கண்காணிப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரோபோ சக்கரங்களில் கடந்த சில ஆண்டுகளாக பலவித நவீன மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்ஸார் பொருத்தப்பட்ட இந்த சக்கர ரோபோக்கள் அவை செல்லும் பாதையில் தடை ஏற்பட்டால் அதை அறிந்து பாதையை மாற்றிச் செல்ல புரோக்ராம் செய்யப்பட்டுள்ளன.
![]()
|
ஹியூமனாய்டு ரோபோக்கள்போல இவற்றால் படி ஏறிச் செல்ல இயலாது என்பதே சக்கர ரோபோக்களில் உள்ள பெரும் சிக்கல். இவை செல்லும் பாதை சமதளமாக இருப்பது அவசியம். மனிதர்களைப் போன்ற கை, கால்கள் கொண்ட ஹியூமனாய்டு ரோபோக்களால் சக்கர ரோபோக்கள் போல பொருட்களை சுமந்து செல்ல இயலாது. மேலும் சிறிய சந்து, குழிகளில் சக்கர ரோபோக்கள் போல எளிதாக புகுந்து செல்ல முடியாது. இந்தப் பிரச்னையைக் களைய சக்கர ரோபோக்களும் படி ஏறி இறங்க வேண்டியது அவசியமாகிறது. எனவே வோர்செஸ்டர் பல்கலை., விஞ்ஞானிகள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதனையடுத்து ஆம்னிவெக் (OmniWheg) எனப்படும் பிரத்யேக படியேறும் சக்கர ரோபோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆம்னிவெக் சக்கர ரோபோக்களின் நான்கு சக்கரங்களும் வெக்ஸ் (whegs) எனப்படுகின்றன. இந்த சக்கரங்கள் தேவைக்கேற்ப தன் அமைப்பை இறகுகள்போல மாற்றிக்கொள்வதே இதன் சிறப்பம்சம்.
சமதளத்தில் நான்கு சக்கரங்கள் கொண்டு நகர்ந்து செல்லும் ரோபோ, திடீரென தனது பாதையில் படி தென்பட்டால், தனது வெக்ஸ் சக்கரங்களை விரித்து மின் விசிறி பிளேட் போல மாற்றிக்கொள்ளும். இதனால் சக்கரங்கள் எளிதில் படிகளைத் தாண்ட முடியும். இந்த வெக்ஸ் சக்கரம் கொண்டு ஆம்னிவோக் ரோபோவால் பல படிகளை சிரமமின்றி கடந்து செல்லமுடியும். இந்தப் பரிசோதனை வெற்றிபெற்று இந்த ரோபோ பொது தேவைக்குப் பயன்படுத்தப்பட்டால் இந்த ரோபோக்கள் பல மைல் தூரத்தை தனது வெக்ஸ் சக்கரம்மூலம் கடந்து செல்லும். படிகள் ஏறி இறங்கும். இந்த ஆம்னிவெக் ரோபோ தயாரிப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ரோபோக்களின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகப் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.