சென்னை: கான்வாயில் தொங்கிய படி, சென்னை மேயர், கமிஷனர் நேற்று(டிச.,10) பயணம் செய்தனர். இந்நிலையில் தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

மாமல்லபுரம் அருகே, கரையை கடந்த மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை நேற்று(டிச.,10) முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த ஸ்டாலின், மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பிறகு காசிமேடு சென்று மீனவ கிராமங்களை பார்வையிட்டதுடன், சேதமடைந்த படகுகளையும் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, எம்.பி., கலாநிதி, சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங், அதிகாரிகள் உடன் சென்றனர்.
இதனை தொடர்ந்து ஸ்டாலின் அங்கிருந்து காரில் கிளம்பினார். அப்போது முன்னே சென்ற கான்வாயில் பிரியா தொங்கியபடி பயணித்தார். அவருக்கு பின்னால், கமிஷனர் ககன்தீப் சிங்கும் கான்வாயில் ஏறி தொங்கியபடி பயணம் செய்தார்.

இது குறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை மேயர் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் முதல்வர் கான்வாய் காரில் தொங்கிக் கொண்டு இருப்பதை பார்த்தேன். சுயமரியாதை, சமூக நீதி, இவை யாவும் ஒரு கட்சியின் கொள்கை, இந்த போலிக் கதைகள் அனைத்தும் ஏற்கனவே நீண்ட காலத்திற்கு முன்பே இறந்து புதைக்கப்பட்டவை. தற்போது மீண்டும் புதைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.