வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: குஜராத்தை பொறுத்தவரை அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோரின் சொந்த ஊர். இதனால், அப்பகுதி மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். காசியில் தமிழ் பற்றி பேசியதால், அப்பகுதி தமிழர்கள் அவர்களுக்கு ஓட்டு போட்டுள்ளனர். தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து வரும் கட்சி தான். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே, லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறும்.
![]()
|
டவுட் தனபாலு: உங்க கூட்டணியில இருந்த, பா.ம.க., ஏற்கனவே கழன்று போயிடுச்சு... இப்படி எல்லாம் நீங்க கறாரா பேசி, பா.ஜ.,வும் கழன்றுகிட்டா, மிஞ்சியிருக்கிற த.மா.கா., மட்டும் தான் உங்களுக்கு தோள் கொடுக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
மக்கள் நீதி மய்யம் முன்னாள் பொதுச் செயலர் அருணாச்சலம்: விவசாயிகளுக்காகவே நான், கமலிடம் இருந்து பிரிந்து சென்றேன். ஆனால், அவர் ஒட்டுமொத்த தமிழகத்திற்குமே, பல திட்டங்களை வைத்துள்ளார். அதனால், மீண்டும் அவருடன் இணைந்தேன். கூட்டணி உள்ளிட்ட பல விஷயங்களில், கமல் பல திட்டங்கள் வைத்திருக்கிறார். இனி, அவரது பங்களிப்பு இல்லாமல், தமிழகம் மட்டுமல்ல, இந்திய அரசியலும் இயங்காது.
![]()
|
டவுட் தனபாலு: தமிழகத்துல இருந்து, தி.மு.க., கூட்டணி சார்புல, ௩௮ எம்.பி.,க்கள் டில்லிக்கு போயும் கூட, இந்திய அரசியல்ல எந்த பங்களிப்பையும் தர முடியலை... எம்.எல்.ஏ., எலக் ஷன்ல கூட ஜெயிக்க முடியாத உங்க தலைவரால, இந்தியன் -௨ படத்துக்கு மட்டும் தான் பங்களிப்பு தர முடியும்கிறதுல, 'டவுட்'டே இல்லை!
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்: அரசு பஸ்களில் கட்டண உயர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. டீசல் விலை உயர்வு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சூழல்கள் இருக்கும் போதும், மக்களின் மீது அந்த சுமையை வைக்காமல், அரசே அந்த சுமையை ஏற்றுக் கொள்ளும். இது, மக்களின் நலன் காக்கும் அரசு; மக்களுக்கான அரசு.
டவுட் தனபாலு: மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி உயரும்னு இதே மாதிரி பேச்சு வந்தப்பல்லாம், உங்கள மாதிரி தான், அந்தந்த துறை அமைச்சர்கள் வேகமா மறுத்தாங்க... ஆனா, ஒரு சில மாதங்கள்லயே தாறுமாறா கட்டணத்தை ஏத்தினாங்க... அதேபோல, பஸ் டிக்கெட் கட்டணத்தையும் உயர்த்திடுவீங்களோன்னு, 'டவுட்' வருதே!
Advertisement