முதல்வரின் மகன் உதயநிதி எம்.எல்.ஏ.,வுக்கு, அமைச்சரவையில் இளைஞர் நலத்துறையுடன் வேறு எந்த துறையை ஒதுக்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மூத்த அமைச்சர்களிடம் இருந்து துறைகளை பிடுங்கினால் பிரச்னை ஏற்படும் என்பதால், முதல்வர் திணறி வருகிறார். இன்று மாலைக்குள் தகராறு தீர்ந்து, இலாகா உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சருக்கான அறை, கோட்டையில், 'ரெடி'யாகி உள்ளது. உதயநிதி நாளை காலை, அமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஆட்சியை பிடித்தது. சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில், தி.மு.க., இளைஞர் அணி செயலரும், முதல்வரின் மகனுமான உதயநிதி வெற்றி பெற்றார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றபோது, அவர் மகன் உதயநிதியும் அமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்டது. முதல்வரின் தயக்கத்தாலும், திரைப்படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்ததாலும், அமைச்சராக பதவியேற்பது தள்ளிப் போனது.
கடந்த சில மாதங்களாக, உதயநிதி அமைச்சராக பதவியேற்க வேண்டும் என தி.மு.க.,வினர் பொது இடங்களில் வலியுறுத்தினர்; அமைச்சர்களும் விருப்பம் தெரிவித்தனர்.
சர்ச்சை
முதல்வருக்கு அடுத்தபடியாக உதயநிதி தான் என்பது முடிவானதால், அமைச்சர்கள் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் துவக்க விழாவுக்கு, அவரை அழைத்தனர்.
அமைச்சர்கள் பங்கேற்ற விழாக்களில், எம்.எல்.ஏ.,வான உதயநிதி, திட்டங்களை துவக்கி வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அழைப்பிதழ்களில் அமைச்சர்களின் பெயருக்கு கீழே, உதயநிதி பெயரை போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இவற்றைத் தவிர்க்க, அவரை அமைச்சராக்குவதே நல்லது என, கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். முதல்வரின் குடும்பத்தினரும், உதயநிதியை அமைச்ச ராக்க நெருக்கடி கொடுத்தனர். இதை முதல்வர் ஏற்றுக் கொண்டார்.
உதயநிதியை அமைச்சராக்கும் வகையில், தலைமை செயலகத்தில் பழைய கட்டடத்தின் இரண்டாம் தளத்தில், அவருக்கு அறை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அவருக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை வழங்கப்பட உள்ளதால், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில், அவருக்கு ஒரு அறையை தயார் செய்யும் பணியும் நடந்து வருகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை ஆகியவற்றுக்கு, அதிக நிதி ஒதுக்கப்படுவதில்லை. எனவே, இந்த துறையுடன் கூடுதலாக, முக்கிய துறையை வழங்க வேண்டும் என, அவருக்கு நெருக்கமானவர்கள், முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, துறையை மாற்றித் தரும்படி, பதவியேற்றதில் இருந்து வலியுறுத்தி வருகிறார். அவருக்கு துறையை மாற்றிக் கொடுக்க வேண்டிய கட்டாயம், முதல்வருக்கு ஏற்பட்டு உள்ளது.
ஆலோசனை
பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு வசம் உள்ள நெடுஞ்சாலைத்துறை; நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வசம் உள்ள கனிமவளத் துறை; நிதி அமைச்சர் தியாகராஜன் வசம் உள்ள மனிதவள மேலாண்மைத் துறை; மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் உள்ள மது விலக்கு ஆயத்தீர்வை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை, உதயநிதிக்கு வழங்கலாம் என, முதல்வருக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
மூத்த அமைச்சர்களின் துறைகளை பிடுங்கினால் பிரச்னை ஏற்படும் என்பதால், முடிவெடுக்க முடியாமல் முதல்வர் திணறி உள்ளார்.
சமீபத்தில் முதல்வர் ரயிலில் தென்காசி சென்றபோது, அமைச்சர்கள் நேரு, பெரியசாமி உடன் சென்றனர். அவர்களுடன், உதயநிதியை அமைச்சராக்குவது, அமைச்சர்களின் துறைகளை மாற்றி அமைப்பது குறித்து, முதல்வர் ஆலோசித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, உதயநிதிக்கு கொடுக்கக் கூடிய துறை, மற்ற அமைச்சர்கள் துறை மாற்றம் தொடர்பாக, இன்று மாலைக்குள் தகராறு முடிந்து, தீர்வு காணப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, உதயநிதியை அமைச்சராக்க, கவர்னருக்கு, முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை கவர்னர் ரவி, நேற்று ஏற்றுக் கொண்டார்.
நாளை காலை 9:30 மணிக்கு, கவர்னர் மாளிகையில் உள்ள தர்பர் ஹாலில், பதவியேற்பு விழா நடக்கும் என கவர்னர் அலுவலகம் அறிவித்துள்ளது.
செயலர் யார்?
உதயநிதி அமைச்சரானால், அவருக்கு ஒதுக்கப்படும் துறைச் செயலராக யாரை நியமிப்பது என்பதிலும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.முதல்வர் அலுவலக செயலர்கள், தங்கள் விருப்பப்படி ஒருவரை நியமிக்க முடிவு செய்துள்ளனர். அதை ஏற்க வேண்டாம் என, உதயநிதிக்கு நெருக்கமான அமைச்சர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இறுதியாக, உதயநிதிக்கு ஒதுக்கப்படும் துறைக்கு, தற்போது சென்னை மாநகராட்சி கமிஷனராக உள்ள ககன்தீப் சிங் பேடியை நியமிக்க முடிவானதாக கூறப்படுகிறது.
தற்போதைய அமைச்சரவையில், 33 பேர் உள்ளனர். உதயநிதி அமைச்சராவதால், முதல்வர் தவிர்த்து, அமைச்சர்கள் எண்ணிக்கை, 34 ஆக உயர்கிறது.
மொத்த எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையில், 15 சதவீதம் பேர் அமைச்சராகலாம். அந்த அடிப்படையில், முதல்வரோடு சேர்த்து, 35 பேர் மட்டுமே அமைச்சரவையில் இடம் பெற முடியும். உதயநிதி அமைச்சராவதால், முழு எண்ணிக்கை பூர்த்தியாகிறது.