வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
'நல்ல காரியம் நடக்கப் போற நேரத்துல இப்படி ஆயிடுச்சேன்னு, உதயநிதிக்கு நெருக்கமானவங்க வருத்தப்படுதாவ வே...'' என்றபடியே, நாயர் கொடுத்த டீயை வாங்கினார் அண்ணாச்சி.
![]()
|
''அப்படி என்ன ஆயிடுத்து ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''சென்னை மெரினா கடற்கரைக்கு வர்ற மாற்றுத் திறனாளிகள், துாரத்துல இருந்து தான் கடலை பார்த்து ரசிக்கிற நிலைமை இருந்துச்சு... அவங்களும் கடல் அலையில கால் நனைக்க வசதியா, தி.மு.க., அரசு கடல் வரைக்கும் நீளமான மரப்பாதை போட்டுச்சு வே...
''எம்.எல்.ஏ., உதயநிதி, இந்த மரப்பாதையை சமீபத்துல திறந்து வச்சாரு... இப்ப, 'மாண்டஸ்' புயல் வீசுறதுக்கு முன்னாடி அடிச்ச காத்துல மரப்பாதை உடைஞ்சு போயிட்டு வே... 'பொதுப்பணித் துறை ஒதுக்கிய, 1 கோடியே, 14 லட்சம் ரூபாயை முழுசா செலவு செஞ்சிருந்தா மரப்பாதை சேதம் அடைஞ்சிருக்காது'ன்னு சொல்லுதாவ...
''அதோட, 'உதயநிதிக்கு அமைச்சர் பதவி குடுக்கப் போற நேரத்துல, அவர் திறந்து வச்ச மரப்பாதை அபசகுனமா உடைஞ்சிட்டே'ன்னு அவரது ஆதரவாளர்கள் வருத்தப்படுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''எந்த மேயரும் செய்யாததை இவங்க செய்துட்டாங்க...'' என அடுத்த தகவலை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.
''யாரு, என்ன செஞ்சிட்டாங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி அறையில, முன்னாள் முதல்வர்கள் அண்ணா துரை, கருணாநிதி, இந்நாள் முதல்வர் ஸ்டாலின் படங்களோட, தி.மு.க.,வின் மறைந்த முன்னாள் பொதுச் செயலர் அன்பழகன் படத்தையும் மாட்டி வச்சிருக்காங்க...
''இது, பலருக்கும் ஆச்சரியமா இருக்குது... 'தி.மு.க.,வின் எந்த தலைவரின் அறையிலும் அன்பழகன் படத்தை பார்க்க முடியாது... இவங்க மட்டும் ஏன் இப்படி மரியாதை செய்றாங்க'ன்னு விசாரிச்சா, 'மேயரம்மா வும், அன்பழகனும் ஒரே சமூகத்தைச் சேர்ந்த வங்க... அதான்'னு பதில் வருதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தமிழக காங்., தலைவர் பதவியை பிடிக்க நடையா நடக்கறாங்க ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''அழகிரியை மாத்தப் போறதா பேச்சு அடிபடறது... அந்தப் பதவியை பிடிக்க, கரூர் பெண் எம்.பி., ஜோதிமணி தீவிரமா களமாடிண்டு இருக்காங்க ஓய்...
''லோக்சபா தேர்தல்ல, இவங்க எம்.பி.,யாக, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க., அமைச்சர் ரொம்பவே ஒத்தாசையா இருந்தார்... தீட்டின மரத்துலயே கூர் பாக்கற மாதிரி, இப்ப அவரையே எதிர்த்து, இந்தம்மா அரசியல் செஞ்சுண்டு இருக்காங்க...
''மாவட்டத்துல அரசு அதிகாரிகளுக்கு எதிரா, அடிக்கடி தர்ணா, போராட்டம்னு நடத்தற தால, ஆளுங்கட்சி தரப்பும் இவங்க மேல எரிச்சல்ல இருக்கு... இப்ப, ராகுல் நடைபயணத்துல கலந்துண்டு இருக்கற ஜோதிமணி, தமிழக காங்., தலைவர் பதவியை, தனக்கு தரும் படி ராகுலிடம் கேட்டுண்டு இருக்காங்க ஓய்...
![]()
|
''பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிரா, தன்னால தான், அரசியல் பண்ண முடியும்னும் ராகுலிடம் சொல்லியிருக்காங்க... ராகுல் நடைபயணத்தை முடிக்கறச்சே, தலைவர் பதவி தனக்கு வந்துடணும்னு 'பிளான்' பண்ணி, அவர் கூடவே நடந்துண்டு இருக்காங்க ஓய்...
''அதே நேரம், இவங்களுக்கு பதவி கிடைக்கறதை மற்ற கோஷ்டிகள் விரும்பலை... தங்களுக்கு கிடைக்காம போனாலும் பரவாயில்லை... அவங்களுக்கு கிடைச்சுடக் கூடாதுன்னு, 'லாபி' பண்ணிண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.