வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:
லோக்சபா தேர்தலில், ஐந்து, ஆறு, 'சீட்'களுக்காக யாரிடமும் தொங்கி நின்று, அவர்கள் கொடுக்கும் தொகுதிகளில் போட்டியிட்டு, ஒன்றிரண்டு சீட்டுகள் ஜெயிப்பதை விரும்ப வில்லை. இதை பிரதமரிடம் சொன்னேன்; தனித்து போட்டியிட பச்சைக் கொடி காட்டி விட்டார். தனித்துப் போட்டியிடும் அளவுக்கு, நாம் வளர்ந்தாக வேண்டும்.

டவுட் தனபாலு:
உங்களது துணிச்சலுக்கு பாராட்டுகள்... அதே நேரம், நீங்களும், அ.தி.மு.க.,வும் தனித்தனியா நின்னா, ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுகள் பிரிஞ்சு, அவங்களது வெற்றி சுலபமாகிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை... இந்தக் கணக்கையும் மனசுல வச்சு முடிவெடுங்க!

முதல்வர் ஸ்டாலின்:
தி.மு.க., ஆட்சிக்கு வந்த போது, கொரோனாவை கட்டுப்படுத்தினோம். அது, முடிவதற்கு முன் வெள்ளம் வந்தது; பெரிய மழை வந்தது; அதையும் சமாளித்து வெற்றி கண்டோம். இப்போது பெரிய புயல் வந்தது. புயலையே சந்திக்கிற ஆற்றல், இன்றைக்கு இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது. எல்லாரும் எனக்கு போன் செய்து, 'ரொம்ப சிறப்பாக செய்து விட்டீர்கள்...' என, பாராட்டுகின்றனர். சமூக வலைதளங்களில் பார்த்தீர்கள் என்றால், பாராட்டுகள் தான் வந்து கொண்டிருக்கின்றன.
டவுட் தனபாலு:
எல்லா ஆற்றலும் இருக்குதுங்கிறீங்க... 'மாதம் ஒரு முறை மின் கட்டணம்; பழைய பென்ஷன் திட்டம்; மகளிருக்கு, 1,000 உதவித்தொகை'ன்னு தேர்தல் நேரத்துல அள்ளிவிட்ட ஏராளமான வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஆற்றல் மட்டும் இல்லாம போனது ஏன்னு, 'டவுட்' எழுதே!
பத்திரிகை செய்தி:
'சட்டத்தை மீறி, ஆபத்தை உணராமல், முதல்வர் ஸ்டாலினின், 'கான்வாய்' காரில் தொங்கியபடி பயணித்த சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
டவுட் தனபாலு:
கார்ல தொங்கியவங்க மேல தப்பு என்றால், காருக்குள் இருந்த முதல்வரின் பாதுகாப்பு பிரிவு போலீசார், அவங்களை தொங்க அனுமதிச்சதும் தப்பு தானே... அதனால, நடவடிக்கை எடுத்தால், அவங்க மேலயும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!