வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-யானை பாகன்களை, தாய்லாந்தில் பயிற்சிக்கு அனுப்பி வைப்பதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், முதுமலை மற்றும் ஆனைமலை சரணாலயங்களில் உள்ள யானைகளை, சிறந்த முறையில் பராமரிக்க, வனத்துறையைச் சேர்ந்த, 13 பாகன்கள் மற்றும் வனச் சரகரை, தாய்லாந்து நாட்டிற்கு பயிற்சிக்கு அனுப்ப, அரசு முடிவு செய்தது. அதற்காக, சரணாலய நிதியில் இருந்து, 50 லட்சம் ரூபாயை ஒதுக்கி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை, கோட்டூரை சேர்ந்த, விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனு:
இந்தியாவில், 30 ஆயிரம் யானைகள் உள்ளன; தாய்லாந்தில், 3,000 யானைகள்தான் உள்ளன. தமிழகத்தில், யானைகள் முகாம் சிறப்பாக உள்ளது. முகாம்களில், யானைகள் பராமரிக்கப்படுகின்றன. திறமையான யானை பாகன்களும் இங்கு உள்ளனர். தாய்லாந்தில் நம் பாகன்கள் கற்பதற்கு ஒன்றும் இல்லை.
யானைகளுக்கு எக்ஸ்ரே எடுப்பதற்கு, இங்கு சிறப்பு மருத்துவமனை இல்லை. கால்நடை மருத்துவர்களை தான் பயிற்சிக்கு அனுப்ப வேண்டும்; பாகன்களை அல்ல.
எனவே, தாய்லாந்துக்கு பாகன்களை அனுப்புவதற்கு பதில், அதற்கான செலவுத் தொகையை, பாகன்களுக்கு ஊக்க ஊதியாக வழங்கலாம்.
எனவே, தாய்லாந்துக்கு பாகனங்களை அனுப்புவதற்கு, நிதி ஒதுக்கி பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். தாய்லாந்தில் உள்ள கால்நடை மருத்துவர்களை வரவழைத்து, இங்குள்ள மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

வன முகாம்களில், யானைகளுக்கான சிறப்பு மருத்துவமனைகளை ஏற்படுத்த, உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
யானைகள் மறுவாழ்வு மையத்தை முறையாக பராமரிக்கக் கோரிய வழக்குடன், இந்த மனுவையும் சேர்த்து விசாரிப்பதாக, முதல் பெஞ்ச் தெரிவித்தது. விசாரணையை, நாளைக்கு தள்ளி வைத்தது.