வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : குஜராத்தில் பா.ஜ.வுக்கு கிடைத்த அமோக வெற்றி வரும் லோக்சபா தேர்தலில் நாடு முழுதும் எதிரொலிக்குமா என்பது குறித்து தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156-ல் பா.ஜ. வென்று வரலாறு படைத்துள்ளது. 1.67 கோடி ஓட்டுக்கள்; அதாவது 52.5 சதவீத ஓட்டுகளை பா.ஜ. பெற்றுள்ளது.
குஜராத்தில் 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.வோ இதுவரை யாரும் பெறாத வெற்றியை பெற்றிருப்பது பிரதமர் மோடிக்கு இருக்கும் அபரிமிதமான செல்வாக்கை வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
குஜராத்தில் வீசிய இந்த மோடி அலை வரும் 2024 லோக்சபா தேர்தலில் எதிரொலிக்குமோ என்ற கவலை காங். - கம்யூ. - ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு மட்டுமின்றி தி.மு.க. - சமாஜ்வாடி திரிணமுல் காங். - தேசியவாத காங்கிரஸ் போன்ற மாநில கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019-ல் இருந்த சூழல் இப்போது நாட்டில் எங்கும் இல்லை. எட்டு ஆண்டுகளை கடந்த மோடி அரசுக்கு எதிராக பெரிதாக எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை.
இம்மாதம் 1ம் தேதி நடந்த தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டத்தின்போது 'குஜராத்தில் பா.ஜ. வென்றால் அக்கட்சியினர் பெரும் உற்சாகம் அடைவர். அதன் தாக்கம் தமிழகத்தில் கூட எதிரொலிக்கலாம்' என முதல்வர் ஸ்டாலின் கூறியதாக செய்திகள் வெளியாகின.

இதை உறுதிப்படுத்தும் வகையில் குஜராத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
குஜராத்தில் பா.ஜ.வுக்கு கிடைத்த அமோக வெற்றி தமிழகத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மூத்த அமைச்சர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுதும் 2019ல் இருந்த மோடி எதிர்ப்பலை இப்போது இல்லை; 2024ல் மோடி தோற்பார் என தமிழக மக்கள் நினைத்தனர். இப்போது மோடிக்கு ஓட்டளிக்க விரும்பாதவர்களும் அவரே மீண்டும் பிரதமராவார் என நம்புகின்றனர்.
தமிழக மக்களின் இந்த மனநிலையை உறுதிப்படுத்துவது போல குஜராத்தில் பா.ஜ. அமோக வெற்றி பெற்றுள்ளது.
லோக்சபலாவிலும் மோடியே வெல்வார் என்று பேசப்படுவதால் நடுநிலையாளர்களின் ஓட்டுக்களும் கணிசமாக பா.ஜ. அணிக்கு செல்ல வாய்ப்புள்ளது. இதுகுறித்து முக்கிய நிர்வாகிகள் மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்தே 'குஜராத்தில் பா.ஜ.வுக்கு கிடைத்த வெற்றிக்கு உள்ளூர் முழக்கங்களே காரணம். குஜராத் தேர்தல் முடிவுகளை பார்த்து மற்றவர்கள் பயப்படத் தேவையில்லை' என ஆளுங்கட்சி பத்திரிகை மற்றும் ஊடகங்களில் தி.மு.க.வினர் எழுதியும் பேசியும் வருகின்றனர்.
இது குஜராத் தேர்தல் முடிவுகளால் தி.மு.க. கலக்கம் அடைந்துள்ளதையே காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.