வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சேலம்: உதயநிதிக்கு அமைச்சராக முடிசூட்டி திமுக ‛வாரிசு' அரசியல் செய்வதாக விமர்சித்துள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, பொய்வழக்கு போட்டு அதிமுக.,வை முடக்கிவிட முடியாது, இது ‛துணிவு' மிக்க கட்சி எனவும் பேசியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்டவைகளை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது: மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் அரசுக்கு எதிராக கொந்தளித்து அதிமுக.,வின் ஆர்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்திற்கு 4 முதல்வர்கள் உள்ளனர். ஒரு முதல்வருக்கே தாக்குப்பிடிக்க முடியாது, ஆனால் 4 முதல்வர்களா? தமிழகத்தில் குடும்ப ஆட்சி மற்றும் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்.
வாரிசு என்பதற்காக தனது மகனுக்கு முடிசூட்டு விழா நடத்துகிறார் ஸ்டாலின். உதயநிதியை தலைமைக்கு கொண்டு வருவதற்கான முன்னோட்டம் தான் அமைச்சர் பதவி. உதயநிதி அமைச்சரானால் தமிழகத்தில் தேனாறு, பாலாறும் ஓடப்போகிறதா? கட்சிக்காக உழைப்பவர்களுக்கு வீட்டுக் கதவை தட்டி பதவி கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக. தேர்தலின்போது திமுக அறிவித்த வாக்குறுதிகள் என்ன ஆனது? குடும்ப பெண்களுக்கு ரூ.1000, சிலிண்டருக்கு ரூ.100 மானியம், கல்விக்கடன் ரத்து, 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவது, அவர்களுக்கான ஊதியம் உயர்வு போன்ற எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

திராவிட மாடல்
அவர்களின் வாக்குறுதிகளையும் கொடுக்காமல், அதிமுக.,வின் அறிவிப்புகளையும் நிறுத்திவிடுகின்றனர். இதனால், மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை வந்துள்ளது. கமிஷன், கலெக்சன், கரெப்சன் ஆகியவையே திராவிட மாடல். அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. நாட்டு மக்களை பற்றி கவலைப்படாமல் வீட்டு மக்களை பற்றியே ஸ்டாலின் சிந்தித்து வருகிறார். தமிழகத்தில் திரைத்துறையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாக கபளீகரம் செய்கிறது திமுக.

அசைக்க முடியாது
ஊழல் செய்து சம்பாதிக்கும் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு திரைத்துறையை பயன்படுத்தி கொண்டிருக்கிறது திராணியற்ற திமுக. அதிமுக இரண்டாக, நான்காக இருப்பதாக கூறுகின்றனர். அதிமுக ஒன்றாக ஒற்றுமையாக உள்ளது; யார் நினைத்தாலும் அதிமுக.,வின் ஒற்றுமையை குலைக்க முடியாது. ஓராயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுக.,வை அசைக்க கூட முடியாது. பொய் வழக்கு போட்டு அதிமுக.,வினரை முடக்க விடலாம் என்று ஒருபோதும் கனவிலும் கூட நினைத்து பார்க்க வேண்டாம். இது துணிவு மிக்க கட்சி. இவ்வாறு அவர் பேசினார்.