சென்னை :தி.மு.க., கூட்டணியில் சேர, பா.ம.க., தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தங்களுக்கு நெருக்கமான காங்கிரஸ் தலைவர்கள் வாயிலாக, ரகசிய துாது விடப்பட்டுள்ள தகவலும் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிப்பதால், அணி மாறும் திட்டத்துடன், பா.ம.க., தரப்பில் காய் நகர்த்தப்படுகிறது.
டில்லியில் நேற்று, அன்புமணியின் மைத்துனரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான விஷ்ணுபிரசாத் அளித்த விருந்தில் பங்கேற்ற, காங்., மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுடன், இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு உள்ளது.
வரும் லோக்சபா தேர்தலுக்கு இன்னும், 15 மாதங்கள் இருக்கும் நிலையில், அதற்கான கூட்டணி வியூகத்தை, முக்கிய அரசியல் கட்சிகள் துவக்கியுள்ளன. இதற்காக திரைமறைவில் பேச்சுகள் நடந்து வருகின்றன.
கடந்த 1998 முதல் 2009 வரை, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த பா.ம.க.,வுக்கு, 2009, 2014, 2019 ஆகிய மூன்று லோக்சபா தேர்தல்களிலும் தொடர் தோல்வியே கிடைத்தது.
நான்கு எம்.பி.,க்கள்
கடந்த 2014-ல் பா.ஜ., அமைத்த மூன்றாவது அணியில் அன்புமணி மட்டும் வென்றார். ஆனாலும், அவரால் மத்திய அமைச்சராக முடியவில்லை.
எனவே, 2024-ல் நடைபெறும் லோக்சபா தேர்தலில், எப்படியாவது மூன்று அல்லது நான்கு எம்.பி.,க்களை பெற்று விட வேண்டும் என, பா.ம.க., காய் நகர்த்தி வருகிறது. அ.தி.மு.க.,வில் உட்கட்சி குழப்பம் நீடிப்பதால், தி.மு.க., கூட்டணியில் சேர விரும்புகிறது.
ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்ப்பால், தி.மு.க.,விடம் இருந்து உறுதியான பதில் வரவில்லை.
எனவே, காங்கிரஸ் வாயிலாக தி.மு.க., கூட்டணியில் சேர, ஏற்கனவே பா.ம.க., முயற்சிகளை மேற்கொண்டது.
இந்நிலையில், பா.ம.க., தலைவர் அன்புமணியின் மைத்துனரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான விஷ்ணுபிரசாத் வாயிலாகவும், மற்ற சில தலைவர்கள் வாயிலாகவும், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் சேர, பா.ம.க., பேச்சு நடத்துகிறது.
அரசியல் வியூகம்
தமிழக காங்கிரஸ் தலைவராக, 2019-ல் நியமிக்கப்பட்ட அழகிரி, வரும் பிப்ரவரியில் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறார். அதனால், புதிய தலைவர் எப்போது வேண்டுமானாலும் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற, ஜோதிமணி, விஜயதரணி, செல்லக்குமார், மாணிக்தாகூர், விஷ்ணுபிரசாத் உள்ளிட்டோர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் மாநில காங்., தலைவர் கிருஷ்ணசாமியின் மகனான விஷ்ணுபிரசாத், ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்கும் நோக்கில், நேற்று முன்தினம் டில்லியில் தன் வீட்டில் விருந்து அளித்தார். அதில், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட சிலர் பங்கேற்றுள்ளனர்.
தினேஷுடன் நீண்ட நேரம் விஷ்ணுபிரசாத் பேசியுள்ளார். அப்போது, 'அ.தி.மு.க., பிளவுபட்டுள்ளதால், தி.மு.க.,வின் கை ஓங்கியுள்ளது. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளை சேர்க்க, தி.மு.க., திட்டமிட்டு வருகிறது.
'இதனால், காங்கிரசுக்கு கடந்த முறை கிடைத்த ஒன்பது தொகுதிகள் மீண்டும் கிடைக்குமா என்பதே சந்தேகம்' என்று கூறியுள்ளார்.
'தி.மு.க.,விடம் குறைந்தது, 10 இடங்களையாவது பெற வேண்டுமானால், அதற்கான அரசியல் வியூகங்களை இப்போதே வகுக்க வேண்டும். தமிழகத்தில், 20 தொகுதிகளில் வன்னியர் சமுதாய ஓட்டுகள் கணிசமாக உள்ளன.
'எனவே, பா.ம.க., வுடன் இப்போதிருந்தே காங்கிரஸ் இணைந்து செயல்பட வேண்டும். தி.மு.க.,விடம் இருந்து, பா.ம.க.,வுக்கும் சேர்த்து தொகுதிகளை பெற வேண்டும். அப்படி செய்தால், காங்கிரசுக்கு கூட்டணியில் அங்கீகாரம் கிடைக்கும்.
'தி.மு.க.,வை பிடியில் வைத்திருக்க முடியும். அதற்கு என்னை தமிழக காங்கிரஸ் தலைவராக்க வேண்டும். அப்படி செய்தால், இந்த காரியங்களை செய்து முடிப்பேன்' என, தினேஷ் குண்டுராவிடம் விஷ்ணுபிரசாத் கூறியுள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
கணிசமான ஓட்டு வங்கி
வடக்கு, மேற்கு மாவட்டங்களில் பா.ம.க.,வுக்கு கணிசமான ஓட்டு வங்கி உள்ளதால், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி உள்ளிட்டோர், பா.ம.க., கூட்டணி வேண்டும் என, ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த, தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற ராமதாஸ், அன்புமணியுடன், தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் காட்டிய நெருக்கம், அதை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது.
கடந்த 2021-ல் சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின், அ.தி.மு.க.,விடம் இருந்து பா.ம.க., தள்ளியே இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க., தனித்து நின்றது.
பா.ம.க., தலைவரான பின் அன்புமணி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், வெற்றி பெறும் கூட்டணியில் இருக்க விரும்புகிறார். எனவே தான், காங்கிரஸ் தலைவர்கள் வாயிலாக, தி.மு.க., கூட்டணியில் சேர, ரகசிய பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.