சென்னை: ஒரு வழியாக தமிழர்கள் 'ஜென்ம சாபல்யம்' அடைந்துவிட்டனர். முதல்வர் மகன் அமைச்சராகி விட்டார். நாடே எதிர்பார்த்த நல்ல சம்பவம் நடந்துவிட்டது. இனி தமிழக தெருக்களில் பாலும் தேனும் ஆறாக ஓடும்.
மக்கள் எவ்வித கவலையுமின்றி மகிழ்ச்சியில் திளைப்பார்கள். திமுக.,வினரோ தற்போதுள்ள முதல்வரையும், வருங்கால முதல்வரையும் எப்படியெல்லாம் குஷிப்படுத்தலாம் என்று மூளையை கசக்கி பிழிய போகிறார்கள்.
ஏற்கனவே தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை டிவி சேனல்களில் 'முதல்வர் நேரம்' என்றாகிவிட்டது. ஒரு நாள் கூட தவறாமல், ஏதாவது ஒரு திட்டத்தை அவர் துவக்கி வைப்பதும், அந்நிகழ்ச்சியை 'லைவ்' ஆக ஒளிபரப்ப டிவி சேனல்கள் போட்டி போடுவதும் ஒரே அமர்க்களம் தான்.
இனிமேல் புதிய அமைச்சருக்கும் என்று தனியாக நேரத்தை டிவி சேனல்கள் ஒதுக்க வேண்டி வரலாம். அவர் நின்றால் செய்தி; நடந்தால் லைவ் என்று கேமராக்கள் அவர் பின்னால் துரத்திக் கொண்டே ஓடும். இல்லாவிட்டால், அரசு கேபிளில் இருந்து அந்த சேனல்கள் அறுக்கப்பட்டு விடும்.
யார் அதிகாரத்திற்கு வந்தாலும் அவர்களின் கையை காலைப் பிடித்து காசு பார்ப்பதையும், காரியத்தை சாதித்து கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ள சினிமாக்காரர்கள், தாத்தாவுக்கு செய்தது போல், பேரனுக்கும் வாரம் ஒரு பாராட்டு விழா நடத்த போகிறார்கள்.
இந்நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமை, ஆளுங்கட்சியின் டிவி சேனலுக்கு மட்டுமே கொடுக்கப்படும். அந்த நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்சர்களையும், விளம்பரங்களையும் பெற்று ஆளுங்கட்சி சார்பு சேனல்கள் 'கொழுக்கப்' போகின்றன.
இவற்றையெல்லாம் பார்க்கும் தமிழக பொது ஜனம், தமிழகத்தில் இருந்த எல்லா பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விட்டன. நாடு சொர்க்க பூமியாக மாறிவிட்டது என்று நினைத்து நினைத்து பெருமைப்பட்டு கொள்ளலாம்.
போஸ்டர் ஒட்டுவதற்கு பெயர் பெற்ற மதுரை, கோவை போன்ற ஊர்களில் இனி புதுப்புது பட்டங்களுடன் நாம் மறந்து போன ராஜாக்களின் பெயர்களுடன் தொடர்ப்படுத்தி போஸ்டர்களை பார்க்கலாம். மதுரையில் 10 * 10 சைஸ் என்றால், கோவையில் 20 * 20 சைஸ் போஸ்டர் ஒட்டி வரவேற்பு நடக்கலாம். ஒரே வருடத்தில் இதற்கு என்றே காத்து கொண்டிருக்கும் பல தனியார் பல்கலைக்கழகங்கள் 'டாக்டர்' பட்டம் கொடுக்கும்.
அடுத்து புதிய அமைச்சரின் மகன் எப்போது முதல்வர் ஆவார் என்று ஆர்வம் கொப்பளிக்க காத்திருக்கலாம்.

இதைப்படித்துவிட்டு, யாரை குறிப்பிடுகிறார்கள் என்றெல்லாம் நீங்கள் கனவு கண்டால், அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல. அடுத்த 4 வருடங்களுக்கு நல்ல தமாஷ் தான்.. ஜாலி தான் மக்களுக்கு.