வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திண்டுக்கல் : குமுளியில் இருந்து திண்டுக்கல்லுக்கு சேதமடைந்த அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் பயணிகள் திட்டியதால் மனம் நொந்து அதை கலெக்டர் அலுவலகம் கொண்டுவந்து, பின்னர் பணிமனையில் ஒப்படைத்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் முருகேசன் 50. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக குமுளி லோயர் கேம்ப் பணிமனை டிரைவராக உள்ள இவர் நேற்று குமுளியில் இருந்து திண்டுக்கல்லுக்கு பஸ்ஸை ஓட்டி வந்தார். மழையால் பஸ் முழுதும் ஒழுகியது. பயணிகள் எரிச்சலடைந்து டிரைவரை வசை பாடினர். இதில் மனம் நொந்த முருகேசன் பயணிகளை திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் இறக்கிவிட்டு பஸ்சை திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தார். கலெக்டர் இல்லாததால் அங்கிருந்த அதிகாரியிடம் மனு அளித்தார்.
அதில் ,''நான் 15 ஆண்டாக அரசு பஸ் டிரைவாக உள்ளேன். நான் ஓட்டி வந்த டி.என்.57 என்.1989 பஸ்சின் கூரை ஒழுகுகிறது. பக்க வாட்டு பகுதிகள், கண்ணாடிகள், டிரைவர் இருக்கை, ஸ்டியரிங் பிளை, மீட்டர் போர்டு, இன்ஜின் என அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன. பயணிப்போரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. பஸ்சை பழுது நீக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் இந்த பஸ்சை சரி செய்து புதுப்பித்து தரும்படி வேண்டுகிறேன் ,''என குறிப்பிட்டிருந்தார்.
இதன் பின் அவர் பஸ்சுடன் திண்டுக்கல் வட்டார போக்குவரவத்து அலுவலகம் சென்று அதிகாரிகளிடம் பஸ்சின் நிலையை காட்டி விட்டு, திண்டுக்கல் தலைமை அரசு போக்குவரத்து பணிமனையில் பஸ்சை ஒப்படைத்தார்.