குறட்டையை தடுக்கும் 'ஸ்பிரே'
'ஸ்லீப் அப்னியா' என்ற குறட்டை நோய் உள்ளோருக்கு, பாதி துாக்கத்தில், சில வினாடிகள் மூச்சு நின்றுவிடும். பிறகு துாக்கி வாரிப் போட்டது போல மீண்டும் வேகமாக சுவாசிப்பர். இந்த குறட்டையை தடுக்க, ஒரு புதிய மூக்கு 'ஸ்பிரே'யை, ஆஸ்திரேலியாவிலுள்ள பிலிண்டெர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சோதித்துள்ளனர். இந்த ஸ்பிரேயை மூக்கினுள் செலுத்தினால், பல மணி நேரத்திற்கு மூக்கு குழாயில் தசைகள் அடைக்காமல் இருக்கும். இது குறட்டையை தவிர்க்கிறது.
பூனைகள் வீடு சேர்ந்தது எப்போது?
வீட்டில் பூனைகளை வளர்க்கும் வழக்கம் எங்கே, எப்போது வந்தது? மெசபடோமியாவில், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், வீடுகளில் மியாவ் சத்தம் கேட்டதற்கான ஆதாரங்களை, அமெரிக்காவிலுள்ள மிசோரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதே காலகட்டத்தில் தான், நதிக்கரைகளில் மனிதர்கள் விவசாயம் செய்யத் துவங்கி இருந்தனர். விவசாயிகளுக்கு எதிரி எலிகள். எலிகளுக்கு எதிரி பூனைகள். எனவே, மெசபடோமியர்கள் விளை நிலங்களிலிருந்த தங்கள் குடிசைகளிலேயே, பூனைகளை வளர்க்கத் துவங்கியதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
போதை வரும் பாதை
புகையிலை, மது போன்றவற்றுக்கு அடிமையாவோருக்கும், அவர்களது மரபணுக்களுக்கும் தொடர்பு இருக்குமா? இருக்கும் என்கின்றனர், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாண மருத்துவக் கல்லுாரியின் விஞ்ஞானிகள். போதைப் பழக்கத்திற்கு நேரடி தொடர்புடைய 2,300 மரபணு கூறுகளை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
ஆசியர், அமெரிக்கர், ஐரோப்பியர் மற்றும் ஆப்ரிக்கர் ஆகிய இனங்களில், போதைக்கு அடிமையானோரின் மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஒப்பு நோக்கினர். அந்த ஆய்வின் முடிவில், போதைப் பழக்கமுள்ளோரிடம் பொதுவாக இருந்த மரபணு காரணிகளை வைத்து, இந்த மரபணுக்களை அவர்கள் பிரித்தறிந்தனர்.
விண்கலனும், அணுக் கழிவும்
அணு உலைகள் வெளியேற்றும் கதிரியக்கக் கழிவை, வழக்கம்போல பூமிக்கடியில் புதைப்பதற்கு பதிலாக, அவற்றை மறுசுழற்சி செய்யலாம் என சில புத்திளம் நிறுவனங்கள் கிளம்பிஉள்ளன.
அதே வேளையில், அணுக் கழிவுகளிலிருந்து, 'அமெரிசியம்-241' என்ற பொருளை பிரித்தெடுத்து, அதை வைத்து விண்கலன்களை இயக்கும் 'பேட்டரி'களை தயாரிக்கவுள்ளது ஐரோப்பிய விண்வெளி முகமை. வரும் 2030ல் துவங்கி, அமெரிசியத்தை எரிபொருளாக பயன்படுத்தி பல விண்கலன்களை, ஐரோப்பிய முகமை இயக்கிப் பார்க்க இருக்கிறது.
சுழற்சிப் பொருளாதாரம்
உலோகங்கள், பிளாஸ்டிக் மற்றும் சிலிக்கன் போன்ற 1 டன் புதிய மூலப்பொருட்களை கொண்டு தான் புதிய மடிக்கணினி உருவாகிறது.
இந்த விரயங்களைத் தவிர்க்க, 'சர்க்குலர் எகானமி' எனப்படும், சுழற்பொருளாதார முறையை பயன்படுத்த வேண்டும் என்கிறது, 'நேச்சர்' இதழின் தலையங்கம். மறு சுழற்சி செய்து தயாரித்த மூலப்பொருட்கள் வாங்குவது முதல், பயன்படுத்திய மின்னணு கருவிகளை குப்பையில் போடாமல் மறுசுழற்சி செய்வது வரை கடைப்பிடிப்பது தான் மறுசுழற்சிப் பொருளாதாரம்.