அண்மைக் காலமாக, செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் பல துறைகளில் அசத்தலான வேலைகளை செய்து காட்டி வருகின்றன. எந்த பாணியிலும் ஓவியம் தீட்டுவது, மென்பொருளாளர்களைப் போலவே கணினிகளுக்கு நிரல்களை எழுதுவது, காணொலி காட்சித் துணுக்குகளை உருவாக்குவது, இணையதளங்களுக்கு எந்தத் தலைப்பிலும் கட்டுரைகளை எழுதித் தருவது என்று செய்யத் துவங்கியுள்ளன.
ஆனால், உண்மையில் இனிமேல், செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள், 'மனிதத் திறன் பெருக்கி'கள் போலவே செயல்படும் என்கிறார், 'லிங்க்ட் இன்' இணையதளத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ரீய்ட் ஹாப்மேன். அவர் முதலீடு செய்திருக்கும் இன்ப்ளெக்சன் ஏ.ஐ., என்ற புத்திளம் நிறுவனம், கணினி நிரல் எழுதத் தெரியாதவர்களுக்கு நிரல்களை எழுதித் தரும் செயற்கை நுண்ணறிவை உருவாக்கி வருகிறது.
அதாவது, விரைவில் எவரும், பேச்சு மூலமே கணினிகளுக்குப் புரியக்கூடிய சிக்கலான நிரல்களை எழுதி விட முடியும்.
மனிதப் பேச்சு ஆணைகளையும் புரிந்து, கணினிகளின் சிக்கலான கோடிங் மொழியையும் புரிந்துகொண்டு பாலமாக செயற்கை நுண்ணறிவு செயல்படும். இதுபோலத்தான் இனி பல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் படைப்புச் சிந்தனை மற்றும் வேலைத் திறன் ஆகியவற்றை பெருக்க உதவும் என்கிறார் ஹாப்மேன்.