பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்படும் நம்முடைய கேன்டிட் புகைப்படங்கள் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். இயல்பாக உணர்ச்சிகளை அதில் வெளிப்படுத்தியிருப்போம். விலங்குகளும் பல சந்தர்ப்பங்களில் பலவித முக பாவனைகளை வெளிப்படுத்தும். அப்படி அவை நகைச்சுவையாக நடந்துகொள்ளும் தருணங்களை புகைப்படம் எடுத்து அனுப்பும் போட்டி நீண்ட காலமாக காமெடி வைல்ட் லைப் போட்டோகிராபி என்ற பெயரில் உலகளவில் நடக்கிறது.
இந்தாண்டு நடந்த போட்டியில் 5,000 புகைப்படங்கள் குவிந்தன. அமெரிக்காவைச் சேர்ந்த பெண் புகைப்படக்கலைஞரான ஜெனிஃபர் ஹட்லி விருது பெற்றுள்ளார். கானுயிர் நகைச்சுவைப் புகைப்படக் கண்காட்சி என்ற பெயரில் 2015 முதல் ஆண்டுதோறும் இந்த புகைப்பட விழா நடத்தப்படுகிறது. இவ்விழா நடத்த வசூலிக்கப்படும், தொகையில் 10% ஏதேனும் ஒரு தொண்டு நிறுவனத்திடம் நன்கொடையாக சேர்க்கப்படுகிறது.
இதனை தோற்றுவித்தது பிரபல புகைப்படக் கலைஞர்களான பால் ஜென்ரல் ஹிக்ஸ் மற்றும் டாம் சுல்லம் ஆகியோர். இதை அவர்கள் நடத்துவதற்கு காரணம், புகைப்பட விழா மூலம் அழிந்து வரும் விலங்குகினங்கள் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்துவது தான்.
இந்தாண்டு புகைப்பட திருவிழாவுக்கு கரடி சிரிப்பது; நரி வெட்கப்படுவது, குரங்குகளின் சேட்டை போன்றெல்லாம் நகைச்சுவையை கூட்டும் ஏராளமான புகைப்படங்கள் வந்திருந்தன. உலக அளவில் நடைபெறும் போட்டி என்பதால் பல நாட்டவர்களும் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி விலங்குகளின் நகைச்சுவையை காட்சிப்படுத்தியிருந்தனர்.
சுமார் 85 நாடுகளிலிருந்து பிரபல புகைப்படக்கலைஞர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இந்திய புகைப்படக் கலைஞரான அஸ்ரதீப் சிங், ஜூனியர் அவார்டை தட்டிச் சென்றுள்ளார். ஜெனிஃபர் ஹட்லி, தான்சான்யா நாட்டின் செரன்கேட்டி தேசியப் பூங்காவில் எடுத்த சிங்கக் குட்டியின் படம் தான் அவருக்கு சிறந்த புகைப்பட விருதை பெற்றுத்தந்துள்ளது.

மூன்று மாத சிங்கக்குட்டி ஒன்று பூனை போன்று தன்னை நினைத்துக் கொண்டதோ என்னவோ, பாதி மரம் வரை தட்டுத் தடுமாறி ஏறி பின் தவறி கீழே விழுகிறது. அவ்வாறு அது தலைக்குப்புற விழும் அந்த கண நேரத்தை தவற விடாது, அவர் எடுத்தப் புகைப்படமே அவரது வெற்றிக்கு காரணம். 'நாட் சோ ரெப்லக்சஸ்' என்ற கேப்ஷனுடன் இவரது புகைப்படம் விழாவில் இடம்பெற்றிருந்தது.

பால்க்லான்ட் தீவுகளில் மார்ட்டின் கிரேஸ் எடுத்த இந்தப் புகைப்படத்தில், ஒரு கிங் பென்குயின் தனது துணையின் விசித்திரமான புதிய தோற்றத்தைக் கண்டு குழம்பி நிற்கிறது.

பிரெஞ்ச் புகைப்படக்கலைஞர் ழான் ஜாக்வஸ் எடுத்த புகைப்படமும் கவனம் ஈர்த்துள்ளது. ஒரு நீர் யானை தனது பெரிய வாயை ஆக்ரோஷமாக திறந்து எதிரே பாறையில் அமர்ந்திருக்கும் ஹெரான் பறவையை விழுங்குவது போன்று காட்சியளிக்கிறது அப்புகைப்படம். யதார்த்தம் என்னவென்றால் அந்த நீர்யானை கொட்டாவி விடும் பொழுது அதன் அருகில் பறவை நின்றுள்ளது. அதற்கு, 'மிஸ்லீடிங் ஆப்ரிக்கன் வியூ பாயிண்ட்' என கேப்ஷன் வைத்து நகைச்சுவையாக்கியுள்ளனர்.

'கிரியேச்சர்ஸ் அண்டர் தி சி' (creatures under the sea) தலைப்பில் ஆர்டுரோ என்ற புகைப்படக் கலைஞர் இரண்டு ட்ரிகர் மீன்களை க்ளோசப்பில் எடுத்துள்ளார். அப்பாவி முகத்துடன் அவை பற்களை காட்டிக்கொண்டு இருப்பது சிரிப்பை வரவழைக்கிறது.

நெதர்லாந்தில் அலெக்ஸ் பன்சியர் எடுத்த இந்த புகைப்படத்தில் சூப்பர்மேன் போல ஒரு சிவப்பு அணில் மழைத்துளிகளுக்கு இடையே பறக்கிறது.

இம்மானுவேல் டோ லின் சான் தென்னாப்பிரிக்காவில் மீர்கட் எனும் பாலைவனக் கீரி விளையாடும் இந்த புகைப்படத்தை எடுத்தார். அய்யோ என்னை விட்டுறா என ஒன்று கெஞ்சுவது போல் உள்ளது.

கம்போடியாவில் உள்ள பாபுவான் கோயிலுக்கு அருகில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில் குரங்கு ஒன்று வடிவேலு பாணியில் மல்லாக்கப் படுத்து மெய்மறந்து உள்ளது. அதனை வந்து இன்னொரு குரங்கு, என்ன இது இப்படி படுத்திருக்கு என்பது போல் கவனித்துக் கொண்டிருக்கிறது. இதனை பெடெரிகா வின்சி புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்தியாவின் ராஜஸ்தானில் அமைந்துள்ளது கேவ்லாதேவ் பறவைகள் சரணாலயம். இங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் இது. பறக்கும் குதிரை என்று நினைத்து விடாதீர்கள். நீலான் எனும் மிகப்பெரிய மான் இனம் இது. அதனை சாரஸ் நாரை பின்னால் இருந்து தாக்கும் காட்சி தான் இவ்வாறு கிளிக் செய்யப்பட்டுள்ளது.

அலாஸ்காவில் கரடியை முகத்திலேயே பஞ்ச் விடும் சால்மன் மீன்.
![]()
|
![]()
|