உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேச்சு:உதயநிதி
அமைச்சரானதற்கு கடுமையான விமர்சனங்களை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்
சண்முகம் தெரிவித்து வருகிறார். சண்முகம் அவர்களே... உங்கள் அப்பா முன்னாள்
எம்.பி., தானே. அதன் அடிப்படையில் தானே, உங்களுக்கு கட்சியில் இடமும்,
'சீட்'டும் கிடைத்தது. உங்களுக்கு வாரிசு அரசியல் பற்றி பேச என்ன தகுதி
இருக்கிறது?
கட்சியின் தலைமையை யாருக்கும் விட்டு தராம, ஒரே
குடும்பம் சொந்தம் கொண்டாடுவது தான் வாரிசு அரசியல் என்பது, பேராசிரியரான
பொன்முடிக்கு தெரியாதா என்ன?
மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி: பா.ஜ., - அ.தி.மு.க., தலைமையில் வலுவான கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. லோக்சபா, சட்டசபை தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தோல்வியுற்றதால், அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர யோசிப்பதாக தகவல்கள் வருகின்றன. அவர்களது கூட்டணி இருக்கப் போகிறதா, சிதைந்து சின்னாபின்னமாக போகிறதா என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அந்த கூட்டணியில் இருக்கும் கட்சிகள், தி.மு.க., அணிக்கு வந்தால், இடப் பற்றாக்குறை காரணமாக, 'எக்ஸ்ட்ரா லக்கேஜ்'களானகாம்ரேடுகளை தான் வெளியில தள்ளுவாங்க!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: வங்கக்கடலில், கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது, சிங்கள கடற்படையினர் கல்வீசி தாக்குதல் நடத்திஉள்ளனர். அத்துடன், 10க்கும் மேற்பட்டபடகுகளில் இருந்த மீன்பிடி கருவிகளை சேதப்படுத்தி, மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர். இது, கடுமையாக கண்டிக்கத் தக்கது.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு, கச்சத்தீவு மீண்டும் நம் கைக்கு வருவது தான்!
திருப்பூர் இந்திய கம்யூ., - எம்.பி., சுப்பராயன் பேட்டி: சொத்து வரி, மின் கட்டண உயர்வால், மக்கள், தொழில் துறையினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் விரும்பாத சொத்து வரி உயர்வையும், மின் கட்டண உயர்வையும், தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
இந்த வரிகளை ஏத்தி ரொம்ப நாளாச்சு... 'இனியும் ஏத்தினீங்க என்றால், கூட்டணியில இருந்து விலகிடுவோம்'னு மிரட்டி பார்த்தா என்ன?