அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: விற்பனை கூடுகிறபோது விலை குறையும் என்பது சாதாரண பொருளாதார கணக்கு. முதல்வரோ பால் பொருட்கள் விற்பனை அதிகரித்திருக்கிறது என, பெருமிதம் அடைகிறார். அப்படியானால், வெண்ணைய், நெய் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது?
* இவர் சொல்ற கணக்கு இடிக்குதே... 'டாஸ்மாக்' மது விற்பனை வருஷா வருஷம் கோடிக்கணக்குல எகிறுது... ஆனா, 'சரக்கு' விலையை குறைக்கிறாங்களா?
***
தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா பேட்டி: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல், வியாபாரிகள் ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். அதே நேரத்தில், 'கார்ப்பரேட்' நிறுவனங்கள் ஒரு முறை பயன்படுத்தும், பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்த அனுமதி அளித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உள்நாட்டு வணிகர்களை பாதிக்காத வகையில் மத்திய, மாநில அரசுகள் சட்ட திட்டங்களை கொண்டு வர வேண்டும்.
ஆங்.... அஸ்கு, புஸ்கு... கார்ப்பரேட், 'கவனிப்பை' உங்களால தர முடியும்னா சொல்லுங்க... உங்களுக்கும் அனுமதி தந்துடுவாங்க!
பன்னீர்செல்வம் அணியில் இருந்து, சமீபத்தில், தி.மு.க.,வுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ., கோவை செல்வராஜ் அறிக்கை: தமிழையும், தமிழ் மக்களையும், தமிழகத்தையும் பாதுகாக்கிற அரணாக, தி.மு.க., விளங்குகிறது. நாட்டின் ஒட்டு மொத்த முதல்வர்களுக்காகவும், ஒட்டு மொத்த மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இணைந்து பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன். இனிமேல், நான்கு கம்பெனிகளாக செயல்படுகிற கட்சிகள் காணாமல் போய்விடும். தி.மு.க., ஒன்று தான் நிலைத்து நிற்கும்.
அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்கு வந்து, இன்று உச்சத்தில் இருக்கும் அமைச்சர்களே, இவரிடம் நிறைய பாடம் கத்துக்கணும் போலிருக்குதே!
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேச்சு: கோவில்களுக்கு சொந்தமான இடங்களை மீட்டெடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு நிலங்கள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. கோவில்களில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் ஆதிக்கத்தை துடைத்து எறிய வேண்டும். ஆலயங்களுக்கு வரும் பக்தர்களிடம் வசூலிக்கும் பணத்தை அரசு ஏய்க்கிறது.
ஆலயங்கள்ல இருந்து கோடி கோடியாக பணம் கொட்டும் வரைக்கும், ஹிந்து சமய அறநிலையத் துறை ஆதிக்கம் ஓயாது!