த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா பேச்சு: தி.மு.க., ஆட்சியில் மினசார கட்டணம், வீட்டு வரி உயர்வு, பால் விலை உயர்வால், மாதம், 3,000 ரூபாய் பட்ஜெட்டில் துண்டு விழுந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கிய வீடுகளில் தற்போது, 400 ரூபாய் கட்டணம் செலுத்தும் அவல நிலை உருவாகி உள்ளது. திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது என்கின்றனர். உதயநிதி அமைச்சராகி இருப்பதால், கோபாலபுரம் மாடல் ஆட்சி தான் நடக்கிறது.
* அவங்க எந்த மாடல் ஆட்சியையாவது நடத்திட்டு போகட்டும்... மக்களை, 'டிசைன், டிசைனாக' படுத்தாமல் இருந்தால் சரி!
***
பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த, அ.தி.மு.க., முன்னாள் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் பேட்டி: அ.தி.மு.க.,வினர் எதிர்பார்ப்பது என்னவென்றால், கே.பி.முனுசாமி பா.ம.க.,வுக்கு சென்று விட வேண்டும். உதயகுமார் உண்மையை பேச வேண்டும். ஜெயகுமார் பேசாமல் இருக்க வேண்டும். பழனிசாமி பணம் கரைய வேண்டும்.
பன்னீர்செல்வத்தின் ஆசையை, அ.தி.மு.க.,வினரின் எதிர்பார்ப்பு என்று சொல்கிறீர்கள், அப்படித் தானே!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: காப்புக் காடுகளின் எல்லைப் பகுதியில் இருந்தே குவாரிகளை திறக்க, தி.மு.க., அரசு அரசாணை பிறப்பத்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. காப்புக் காடுகளின் எல்லையில் இருந்து, ௧ கி.மீ., துாரத்திற்குள் குவாரிகள் நடத்த, இதுவரை தடை இருந்ததால், காடுகளின் வன உயிரி சூழல் ஓரளவுக்கு பாதுகாப்பாக இருந்தது. தற்போது இந்த தடை நீக்கப்பட்டு விட்டதால், காப்புக் காடுகளும் கனிம வளத்தால் கொழிப்பவர்களின் வேட்டைக் காடுகளாகி விடும்.
கனிமவளத் துறையை துரைமுருகன் அடம் பிடித்து வாங்கியதன் பின்னணி இப்பதானே தெரியுது!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'ஹிந்து மதம் இந்தியாவை தாண்டி வேறு ஒரு நாட்டில் பரவவே இல்லை. ஆனால், கிறிஸ்துவம், 200 நாடுகளில் பரவி இருக்கிறது. சகோதரத்துவத்தை, சமத்துவத்தை போதிக்கிற மதம் இஸ்லாமும், கிறிஸ்துவமும்' என, திருமாவளவன் கூறியுள்ளார். மதம் பிடித்தவர்கள் தான் மதத்தை பரப்புவர்; மதம் மாற்றுவர். ஹிந்து என்பது மதம் அல்ல... வாழ்க்கை முறை!
இதெல்லாம் திருமாவுக்கும் தெரியும்... ஆனா, ஹிந்து மதத்தை திட்டினா தான், சில நுாறு ஓட்டுகள் விழும் என்பதால் தான் இப்படி பேசுகிறார்!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக, மத்திய உருக்குத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். சேலம் இரும்பாலையை, புத்துயிரூட்டுவதற்கு பதிலாக, அதை விற்பனை செய்ய மத்திய அரசு முயல்வது, அதிர்ச்சி அளிக்கிறது. சேலம் பகுதி மக்கள், தங்களின் வாழ்வாதாரமாக விளங்கிய, 4,000 ஏக்கர் நிலங்களை, ஏக்கர் 5,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் கொடுத்ததால் தான் சேலம் இரும்பாலை உருவானது.
'மேக் இன் இந்தியா' என, முழங்கும் மத்திய அரசுக்கு, சேலம் இரும்பாலையை லாபகரமாக இயக்க ஒரு வழி தெரியவில்லையா?