காத்மாண்டு :நேபாளத்தில், நேபாளி காங்கிரஸ் கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவராக, பிரதமர் ஷேர் பகதுார் துாபா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் வாயிலாக, ஆறாவது முறையாக பிரதமராகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து உள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்தில், பார்லிமென்ட் தேர்தல் நவம்பர் 20ல் நடந்தது. இதில் ஆளுங்கட்சியான நேபாளி காங்கிரஸ், மக்கள் பிரதிநிதி சபையின் 275- இடங்களில், ௮௯ல் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது.
![]()
|
புதிய அரசு அமைப்பது தொடர்பாக கூட்டணி கட்சிகள் மற்றும் ஆதரவு கட்சிகளுடன் நேபாளி காங்கிரஸ் பேச்சில் ஈடுபட்டுள்ளது. தேர்தலுக்கு முன், முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரசந்தா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன், நேபாளி காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் செய்தது.
இதன்படி, ஐந்துஆண்டு கால ஆட்சியில் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் பிரதமராக இருக்க முடிவு செய்யப்பட்டது.புதிய அரசை அமைக்க, அதிபர் வித்யா தேவி பண்டாரி, ஒரு வாரம் மட்டும் அவகாசம் அளித்துள்ளார். இதன்படி, வரும் ௨௫ம் தேதிக்குள் ஆட்சி அமைக்க உரிமை கோர வேண்டும்.
இது தொடர்பாக நேபாளி காங்கிரஸ் மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே பேச்சு நடந்து வருகிறது.
முதல் இரண்டரை ஆண்டுகள் பிரதமராக இருக்க பிரசந்தா விருப்பம் தெரிவித்துள்ளார். இதில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், நேபாள காங்கிரஸ் எம்.பி.,க்கள் குழுத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் பிரதமர் துாபாவை எதிர்த்து, பொதுச் செயலர் ககன் குமார் தப்பா போட்டியிட்டார்.
கட்சியின், ௮௯ எம்.பி.,க்களில், ௬௪ பேர் துாபாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். தப்பாவுக்கு ௨௫ ஓட்டுகள் கிடைத்தன. இதையடுத்து, கட்சியின் பிரதமர் வேட்பாளராக துாபா தேர்வாகிஉள்ளார்.நேபாளி காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமைந்தால், அவர் ஆறாவது முறையாக பிரதமராக பதவியேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.