மும்பை: உலகின் அடுத்த நிதி நெருக்கடி என்பது, தனியார் 'கிரிப்டோ கரன்சி'களால் தான் வரும் என்று, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறிஉள்ளார். மேலும் பணவீக்கத்தை எதிர்த்து போராட, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே, சிறப்பான ஒருங்கிணைந்த அணுகுமுறை உள்ளதா
கவும் அவர் கூறியுள்ளார்.தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சக்திகாந்த தாஸ், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து, பணவீக்கத்தை சமாளிக்க எடுத்த நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு கூறினார்.அவர் மேலும் கூறியுள்ளதாவது:

பணவீக்கத்தை குறைக்க வட்டி விகிதங்கள், பணப்புழக்கம், பணவியல் கொள்கை ஆகியவற்றில் ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது.அதே நேரம், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைப்பது, இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் மீதான வரிகளை குறைப்பது என, வினியோகப் பிரிவில் பல நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டது.
இந்திய நிதித் துறை மிகவும் வலுவாக உள்ளது.
இந்த சாதனைக்கு, கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் நிதித் துறை நிறுவனங்கள் ஆகிய இரண்டும் முக்கிய காரணமாகும்.உலகின் அடுத்த நிதி நெருக்கடி, தனியார் கிரிப்டோ கரன்சிகளால் வரக்கூடும். 'பிட்காய்ன்' போன்றவற்றை தொடர்ந்து வளர விட்டால், இந்நிலை ஏற்படும்.மத்திய வங்கிகளின் 'டிஜிட்டல்' நாணயங்கள் தான் எதிர்கால நாணயங்களாக இருக்கும். இந்தியாவில் இதற்கான வெள்ளோட்டத்தை ரிசர்வ் வங்கி துவங்கி உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.