வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் இறுதி தேர்வுகள் முடிந்த பின் மாணவர்களை சந்திக்கவே, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை, 2023 ஜனவரிக்கு பதில் ஏப்ரலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வரும், 2024ல் நடக்கும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள, அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கன்னியாகுமரி மாவட்டத்தில், 'இந்திய ஒற்றுமை பயணம்' என்ற பெயரில் நடைபயணத்தை துவக்கி, பல மாநிலங்கள் வழியாக டில்லியை அடைய உள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் இருப்பதற்காக, தி.மு.க., அரசை கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில், ஜூலை 5ல் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் பேசிய அண்ணாமலை, 'வரும் டிச., 31க்குள் தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், ஜன., 1 முதல், கன்னியாகுமரியில் இருந்து சென்னை கோபாலபுரம் வரை, பா.ஜ.,வினர் பாதயாத்திரை செல்வர்' என்றார்.
இதையடுத்து, ஜனவரி முதல் பாதயாத்திரையை மேற்கொள்ள அண்ணாமலை திட்டமிட்டார். அதில் முக்கிய அம்சமாக, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கல்லுாரி, பள்ளி மாணவர்களை சந்திக்க முடிவு செய்யப்பட்டது.
அந்த காலத்தில் பள்ளி, கல்லுாரிகளில் இறுதி தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராகி வருவர். இதனால், பாதயாத்திரையின்போது, அவர்கள் அதிகளவில் பங்கேற்பரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
'பாதயாத்திரையை ஏப்ரல் இறுதியில் துவங்கினால், கோடை விடுமுறையில் அதிக மாணவர்களை சந்திக்க ஏற்பாடு செய்ய முடியும்' என, அண்ணாமலையிடம் பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, பாதயாத்திரையை 2023 ஜனவரிக்கு பதில் ஏப்ரலில் நடத்த, அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.