சத்குரு மனித உடலை இயற்கை நமக்கு வழங்கிய ஒரு சிறந்த பரிசாக கருதுகிறார். இதை நாம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்காவிடில், நாம் செய்ய விரும்பும் எந்தவொரு விஷயத்திலும் அது ஒரு தடையாக மாறும் என்று எச்சரிக்கிறார். நம் உடல் நலம் பேண எளிய வழிகளையும் காட்டுகிறார்.
சத்குரு: உடல் என்றால் வலி சார்ந்தது, களைப்பு சார்ந்தது என்று மக்கள் தவறான முடிவுக்கு வந்துள்ளனர். உடல் என்பது வலி அல்ல. இந்த உடலை நீங்கள் கனமாக உணராத வகையில் நீங்கள் அதை மிகவும் இலேசாக அழகாக வைத்துக்கொள்ள முடியும். சரியான உணவு, குறிப்பிட்ட நேரத்தில் சில பயிற்சிகள், அணுகுமுறையில் சிறிய மாற்றம், இவை உங்கள் உடலை அதிசய கருவியாக்கி மகிழ்விக்கும்.
இந்த உடலை நீங்கள் ஒரு கருவியாக கருதினால், அது நிச்சயமாக பூமியின் இன்றைய அதிநவீன கருவியாகும். இதற்கு இணையாக உலகில் எந்தவிதமான கணினி கருவிகளும் தற்போது இல்லை. DNA-வின் ஒற்றை மூலக்கூறு பல செயல்திறனைக் கொண்டுள்ளது. எனவே, மனித உடல் நிச்சயமாக சிறந்த செயல்பாடுடன் கூடிய இயந்திரமாகும்.
உடல், வாழ்க்கையில் உங்களுக்கு வழங்கப்பட்ட முதல் பரிசு ஆகும். உங்களை படைத்தவர் யாராக இருப்பினும் அவர் உங்களுக்கு இந்த அற்புதமான உடலை வழங்கியுள்ளார். உங்களுக்கு வழங்கப்பட்ட அந்த சிறந்த பரிசை சரிவர பராமரிக்காமல் துஷ்பிரயோகம் செய்வதை அவர் கண்டால், மிகச் சிறந்த ஒன்றையே பராமரிக்காத உங்களுக்கு மேற்கொண்டு எந்த பரிசுகளையும் வழங்குதல் சரியல்ல என முடிவெடுப்பார். இதை தவிர்க்க நாம் இவ்வுடலை ஒரு இலகுவான, மலர்ந்த மகிழ்ச்சியான நிலையில் வைக்கவேண்டியது மிகவும் அவசியம். உடல் மலர்ச்சியாக இருந்தால், அது நீங்கள் வாழ்க்கையில் முன்னேற உங்களை உற்சாகப்படுத்தும்.
இதற்காக நீங்கள் ஒரு சிறந்த விளையாட்டு வீரராகவோ அல்லது உடற்பயிற்சி நிபுணராகவோ இல்லாமலே உடலை நன்றாகவும், ஆரோக்கியமாகவும், சௌகர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க முடியும். உடலை மலர்ச்சியாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இல்லையெனில், உங்கள் முன்னேற்றத்தில் குறுக்கிட்டு மிகவும் எளிதாக பின்தள்ளிவிடும். ஒரு மழைக்குப் பிறகு, நீங்கள் வெளியே சென்று பார்த்தால், எல்லா தாவரங்களைப் போல உடலும் தானே மகிழ்ச்சியாக மலர்ச்சியாக இருக்க முடியும்.
உடல் சரியாக இருக்கையில் குறிப்பிட்ட சில உணவுகளை உட்கொண்டால், உற்சாகமாகமும் வேறு சில உணவுகளை உட்கொண்டால் சோர்வாகவும், சோம்பலாகவும் உணர்வீர்கள். உங்கள் தூக்க அளவு அதிகரிக்கும். நாம் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் வீதம் தூங்கினால், நாம் அறுபது ஆண்டுகள் வாழும் பட்சத்தில், நம் வாழ்வின் இருபது ஆண்டுகள் நாம் தூங்கியுள்ளோம் - அதாவது நம் வாழ்வில் மூன்றில் ஒரு பங்கு தூங்கிக் கழிப்போம். மீதமுள்ள முப்பது முதல் நாற்பது சதவிகிதம் நேரம், கழிப்பறை மற்றும் பிற குளியல், சிற்றுண்டி மற்றும் உணவு இடைவேளை மற்றும் பூஜை, தியானம், சுத்தம் செய்யும் பழக்கத்தினால் செலவாகிறது, எனவே வாழ்க்கையை வாழ்வதற்கு என்ன மிச்சம்? உண்மையில் நேரம் இல்லை.
தூக்கத்தை யாரும் ரசிக்க முடியாது. தூங்கும்போது நீங்கள் இல்லை. உடல் ஓய்வெடுப்பதை உள்மனம் கவனிக்கிறது. நீங்கள் அனுபவிக்கக்கூடிய ஒரே விஷயம் அமைதி. நல்ல தூக்கத்தின்போது உடல் நன்றாக ஓய்வெடுக்கிறது - அதைத்தான் நீங்கள் அனுபவிக்கிறீர்கள். உடல் நன்கு ஓய்வெடுப்பது எப்படி? முதலில், அது ஏன் சோர்வடைகிறது? மன அயர்ச்சியும் சலிப்பும் உடலுக்கு சோர்வு தரும். வேலைபளு காரணமாக உடல் சோர்வடைவதில்லை. ஒத்துவராத உணவும் உடலுக்கு சோர்வு தரும். நல்ல உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்ள சில அணுகுமுறைகள் உள்ளன, நீங்கள் தவறான வகை உணவை சாப்பிட்டால், உங்கள் உடல் கனமாகி அதை இழுத்துச் செல்ல நேரிடும். நீங்கள் சரியான உணவை சாப்பிட்டால், உடல் இலேசாகி அது உங்களை முந்திச் செல்லும். உடல் அப்படித்தான் இருக்க வேண்டும்.
ஆசிரிய குறிப்பு: சத்குருவின் இந்த புத்தகதில் உடல் பற்றிய அனைத்தையும் படித்தறியுங்கள் - உடல் எனும் யந்திரம்