தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: ஒரு தலைவரின் கையில் கட்டியிருக்கும், 'வாட்சை' விட, வேறு ஒரு தலைவரின் தலையில் இருக்கும், 'விக்'கின் விலை அதிகம் என்பது தெரியாமல், வம்பை விலை கொடுத்து வாங்கி கொண்டிருக்கின்றனர் உடன்பிறப்புகள். தனி நபர் விமர்சனம் செய்வது முறையல்ல.
* 'எதை விதைக்கிறோமோ; அதைத் தான் அறுவடை செய்ய முடியும்'கிறதை அழகா உணர்த்திட்டார்... பொங்கியவங்க, இனி, 'பொசு'க்குன்னு அடங்கிடுவாங்க... பாருங்க!
***
தமிழக காங்., தலைவர் அழகிரி பேட்டி: ராகுல் நடைபயணம், சமூக மேம்பாட்டிற்காக நடத்தப்படுகிறது. பொதுவாழ்வில் உள்ளவர்களும் மற்றும் கலை உலகில் உள்ளவர்களும் தங்களை நடைபயணத்தில் இணைத்து கொள்கின்றனர். டில்லியில், ராகுல் நடைபயணத்தில் கமல் பங்கேற்கிறார். கமல் பண்பானவர்; சமூக சீர்திருத்தத்தில் நம்பிக்கை உடையவர். ராகுலுடன், கமல் கைகோர்த்திருப்பது, மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
ராகுல், தமிழகத்தின் கன்னியாகுமரியில் தானே நடைபயணத்தை துவங்கினார்... அப்ப எல்லாம், பண்பான, சமூக சீர்திருத்தத்துல நம்பிக்கை உள்ள கமல் எங்க போயிருந்தாராம்?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழகத்தில் காப்புக் காடுகளை சுற்றி, 1 கி.மீ., பரப்பளவில், கல் குவாரிகள், சுரங்கங்கள் அமைக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
குவாரி உரிமையாளர்களுக்காக, சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பை பலி கொடுக்க, தமிழக அரசு தீர்மானித்திருப்பது கண்டிக்கத்தக்கது; அந்த அரசாணையை உடனே ரத்து செய்ய வேண்டும்.
காப்புக் காடுகளுக்கு ஆப்பு வைக்க துடிக்கும் இந்த அரசாணையை, கண்டிப்பாக ரத்து பண்ணியே ஆகணும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை!
பன்னீர்செல்வம் அணியின் சிறுபான்மையினர் பிரிவு மாநில செயலர் கா.லியாகத் அலிகான் அறிக்கை: சிறுபான்மையின மக்களின் கல்வி, சமூகம், பொருளாதார நிலைகளை உயர்த்தி, பெரும்பான்மையின மக்களுக்கு நிகராக மேம்படுத்திடும் நோக்கத்தில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு சலுகைகள், திட்டங்கள், நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது. ஆனால், 'சிறுபான்மையினருக்கு மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை' என, காங்கிரஸ் கட்சி கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.
சிறுபான்மையினருக்கு சலுகைகள், வசதிகள் செய்து கொடுக்க, தங்களுக்கு மட்டும் தான், 'பேடன்ட்' இருப்பதாக காங்கிரசார் நினைச்சுக்கிறாங்க போலும்!