புதுடில்லி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், 2019 இறுதியில் கொரோனா தொற்று பரவியது. இதைத் தொடர்ந்து, 2020 மற்றும் 2021ல், உலகம் முழுதும் கொரோனா தொற்று பரவி அனைத்து நாடுகளும் முடங்கின.
கொரோனா பரவல் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்ட பின், உலக நாடுகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
![]()
|
ஆனால், சீனாவில் உருமாறிய 'பி.எப்., - 7' வகை கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது.
இது, சீனாவைத் தொடர்ந்து மேலும் சில நாடுகளிலும் பரவத் துவங்கியுள்ளது. இதையடுத்து, விமான நிலையங்களில் மீண்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்மன்சுக் மாண்டவியா, கொரோனா பரவல் நிலை மற்றும் தயார் நிலை குறித்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின், மத்திய சுகாதாரத் துறை செயலர்,மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிவதை, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். கொரோனா பரிசோதனைகளை தீவிரமாக நடத்த வேண்டும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் ரத்த மாதிரிகளை உடனே மரபணு ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும்.
கொரோனா தடுப்பூசி, செயற்கை சுவாசக் கருவிகள், ஆக்ஸிஜன் வசதி, படுக்கைகள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement