வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
அ.மணி, நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா 1,000 ரூபாய் ரொக்கம், தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு தரும் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கித் தான், பொங்கல் கொண்டாட வேண்டிய நிலையில், 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களும், அவர் தம் குடும்பத்தினரும், 'விடியல் ஆட்சி'யில் வாழ்கின்றனர் என்றால், இது, பெருமைப்பட வேண்டிய விஷயமல்ல. ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயம்; வேதனைப்பட வேண்டிய விஷயம்.
பொங்கல் என்ற பெயரில், தமிழகத்தில் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, நாடு முழுதும் 'மகர சங்கராந்தி, சக்ராத் (கிச்சடி), உத்ராயன், லோஹ்ரி' என, பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. ஆனால், தமிழகத்தை தவிர, வேறு எந்த மாநில அரசும், தங்கள் மாநில மக்களை அரசு தரும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கி, கொண்டாடும் நிலையில் வைத்திருக்கவில்லை.
![]()
|
இப்படி பிச்சை வாங்கி பொங்கல் பண்டிகை கொண்டாடும் நிலையில், தங்களுக்கு ஓட்டளித்த மக்களை வைத்திருக்கும் கழகங்களுக்கு, இதில் பெருமை வேறு, கர்வம் வேறு. இந்த லட்சணத்தில், '1,000 ரூபாய் போதாது; 3,000 ரூபாய் கொடுக்க வேண்டும்' என்று, ஒரு மஹானுபாவர் அறிக்கை விட்டுள்ளார்.
மகாபாரதத்தில், பாண்டவர்களில் மூத்தவரான தர்மருக்கு, தான் ராஜசூய யாகம் நடத்தி முடித்ததில், மனதில் கொஞ்சம் பெருமையும், கர்வமும், அகம்பாவமும் உண்டானது. அவருக்கு மனதில் கர்வம் புகுந்ததை உணர்ந்த கிருஷ்ணர், அந்த கர்வத்தை தலையில் தட்டி, அடக்க நினைத்தார். அதன் பொருட்டு, பாதாள உலகத்தில் தன்னால் உலகளந்து அடக்கி வைக்கப்பட்டு, சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரகலாதனின் பேரனான மஹாபலி சக்கரவர்த்தியை காண அழைத்து சென்றார்.
அவரிடம் தர்மரை அறிமுகப்படுத்தி, 'இவர், ஹஸ்தினாபுரத்தை ஆண்டு கொண்டிருக்கும் மாமன்னர் தருமர்; யமதர்மனின் மகன். தினமும், 9,000 பேருக்கு உணவளித்த பிறகே, உண்ணும் வழக்கமுடைய தர்மபிரபு...' என்றார்.
அதை கேட்ட மஹாபலி, முகத்தை திருப்பி, 'மன்னிக்கவும், கிருஷ்ணா... அவர் முகத்தை பார்க்க பிடிக்கவில்லை. தான் போடும் சோற்றுக்காக, தினமும், 9,000 பேர் காத்திருக்கும் வகையில் ஆட்சி நடத்தும் இவரா மாமன்னர்' என்று, முகத்தில் அடித்தார் போல பேசினார்.
அந்த நொடியே, தர்மரிடம் குடி கொண்டிருந்த அகம்பாவம், ஆணவம், கர்வம், பெருமை அவரை விட்டு அகன்றன.
தர்மரின் கர்வத்தை அடக்க, மஹாபலியிடம் அழைத்து சென்றார், கிருஷ்ணர். கழக ஆட்சியாளர்களின் அகம்பாவத்தை, யார் அடக்கப் போகின்றனர்... யாரிடம், யார் அழைத்துச் செல்லப் போகின்றனர்?
தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பத்தினரும், தங்களின் சொந்தக் காசில், சுய சம்பாத்தியத்தில் பொங்கல் கொண்டாடும் நிலைமையை உருவாக்க, கழக அரசு முற்பட வேண்டும். அதற்கேற்ற வகையில், அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அவர்களை வக்கற்றவர்களாகவே வைத்திருப்பது பெருமையான விஷயமல்ல. ஒவ்வொரு குடிமகனும் சொந்தக் காசில் பொங்கல் கொண்டாடும் நாள் எந்நாளோ, அந்நாளே உண்மையான பொங்கல் திருநாள்!