தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: பா.ஜ., மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் வாகனத்தின் மீது, தி.மு.க.,வினர் கடும் தாக்குதல் நடத்தி இருப்பது, தமிழகத்தில் காட்டாட்சி நடப்பதை உறுதி செய்கிறது. பா.ஜ., வளர்ச்சியை கண்டு அஞ்சும், தி.மு.க.,வின் படபடப்பை வெளிப்படுத்துகிறது. இந்த உருட்டல், மிரட்டல்களுக்கு பா.ஜ., அஞ்சாது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு தொடர்ந்து சீர்கெட்டு வருகிறது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம், இந்த தாக்குதல். சட்டம் - ஒழுங்கை பேணி காக்க முடியாத அரசு இருந்து என்ன பயன்?இவர் எழுப்பியுள்ள இதே கேள்வி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எப்ப எழுதோ, அப்ப கச்சேரி காத்திருக்குது!
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு: ஜனவரிக்கு பின், தமிழக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும். அரசியல் சாசனப்படி, பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருந்தால் முதல்வர் ஆகலாம். சசிகலாவிற்கு பெரும்பான்மை இருந்தும், கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்கவில்லை. பா.ஜ., செய்த சதியால், சசிகலாவால் முதல்-வராக முடியவில்லை.'வருமானத்துக்கு மீறி, பல நுாறு கோடி ரூபாய்க்கு சொத்துக்களை வாங்கி குவியுங்க' என, பா.ஜ.,வா சசிகலாவுக்கு 'ஐடியா' கொடுத்தது?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில், கரும்பு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில், லட்சக்கணக்கான ஏக்கரில், விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். எனவே, தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால், விதை வாங்கிய செலவைக் கூட விவசாயிகளால் ஈடு செய்ய முடியாது. நம்ம நிதியமைச்சர் தியாகராஜனிடம் கேட்டா, 'நாங்களா, உங்களை கரும்பு பயிரிட சொன்னோம்'னு குதர்க்கவாதம் பேசுவாரே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி: பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., பிரதான எதிர்க்கட்சியாக, மக்களின் எண்ணங்களை, கோரிக்கைகளை நிறைவேற்றாத, தி.மு.க., அரசை கண்டித்து, தினந்தோறும் போராட்டங்களை நடத்தி வருகிறது. அ.தி.மு.க., பழனிசாமி தலைமையில் பாதுகாப்பாக உள்ளது. முன்பெல்லாம் கொள்கை உள்ளவர்கள், லட்சியம் உள்ளவர்கள் இயக்கம் துவங்கினர்; இப்போதெல்லாம், காசு இருப்பவர்கள் கட்சி துவக்குகின்றனர்.கொள்கை, கோட்பாடுக்காக கட்சி துவங்கிய காலம் மலையேறிடுச்சு... 'சீட்டு, நோட்டு, ஓட்டு' என்ற மூணு தாரக மந்திரங்களுக்கு தான் இப்ப கட்சி துவங்குறாங்க!
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பேச்சு: தன் யாத்திரையில் பங்கேற்க, காங்., - எம்.பி., ராகுல் கடிதம் அனுப்பியிருந்தார்; அதில், கட்சியின் தலைவராக அல்லாமல், என்னை ஒரு குடிமகனாக குறிப்பிட்டிருந்தார். ஒரு இந்தியனாக, இழந்து கொண்டிருக்கும் மாண்புகளை மீட்கும் முயற்சியாக இதை கருதுகிறேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்ட இந்த முன்னெடுப்பில், தலைநகரில் உள்ள தமிழர்களும் பங்கேற்க வேண்டும். இது, தேசத்திற்கான ஒரு நடைபயணம்; கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. வாருங்கள்... புதிய இந்தியா படைப்போம்.கமலை ஒரு அரசியல் கட்சியின் தலைவராக ராகுல் ஏற்க வில்லை என்பது தான், இதன் மூலம் புலப்படுகிறது!
மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை: ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு விண்ணப்பத்தில், 10ம் வகுப்பு மதிப்பெண்களும் கேட்கப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், கொரோனா காரணமாக, தமிழகம் உட்பட பல மாநிலங்களில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. எனவே, மத்திய அரசு உடனடியாக ஜே.இ.இ., விண்ணப்பத்தில் திருத்தம் செய்து, 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இல்லா விட்டாலும், நுழைவுத்தேர்வு எழுதும் நிலையை உருவாக்க வேண்டும்.'பள்ளிக்கூடம் போகாம, பாடம் படிக்காம, பாஸ் பண்ணிய கூட்டம்'னு பெருமை அடிச்ச பசங்க, இப்படி ஒரு, 'டுவிஸ்ட்'டை எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: தி.மு.க., அரசு, தமிழக குடிமக்களுக்கான அரசா அல்லது கனிம வளத்தை சுரண்டும், குவாரி உரிமையாளர்களுக்கான அரசா? ஏற்கனவே, 'காப்புக் காடுகளின் எல்லையில் இருந்தே, குவாரி நடத்தலாம்' என, உத்தரவிட்ட சில நாட்களிலேயே, 'தொல்லியல் நினைவுச் சின்னங்களில் இருந்து, 500 மீட்டர் துாரத்திற்குள் குவாரி நடத்தக் கூடாது' என்ற விதிமுறையை, தற்போது தளர்த்தி உள்ளனர். கடும் கண்டனத்துக்குரிய இந்த அரசாணையை, உடனே திரும்பப் பெற வேண்டும்.துறையின் அமைச்சர் துரைமுருகன், 'நவ் ஆர் நெவர்' என்ற பாணியில் களமாடுவது, 'கன்பார்ம்' ஆக தெரியுது!
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலர் நடராஜன் அறிக்கை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு கரும்பு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில், கூடுதல் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில், செங்கரும்பு இடம் பெறவில்லை; இதனால், விவசாயிகளுக்கு கடும் விலை வீழ்ச்சி ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, மாநில அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், செங்கரும்பையும் இணைத்து வழங்க வேண்டும்.வருஷா வருஷம் பொங்கலுக்கு கரும்பு கொடுத்த அரசு, இந்த வருஷம் தர மறுக்கிறது என்றால், தனியார் சர்க்கரை ஆலைகள் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்ய, வழி ஏற்படுத்தி தருதா என்ற கேள்வி எழுகிறதே!