வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஹிந்து விரோத கட்சி தி.மு.க., என்ற பா.ஜ.,வின் பிரசாரத்திற்கு வலுசேர்க்கும் வகையில், கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர் உதயநிதி பேசியுள்ளதாக, தி.மு.க.,வினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
சென்னை, மண்ணடியில் உள்ள டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் டிச.22ம் தேதி நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய, தி.மு.க., இளைஞரணி செயலரும், இளைஞர் நலன், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி, 'நானும் ஒரு கிறிஸ்துவன்தான். கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். நான் காதலித்து மணந்ததும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பெண்தான்' என்றார்.
உதயநிதியின் பேச்சு பெரும் சர்ச்சையாகியுள்ளது. ஈ.வெ.ரா.,வுடன் ஏற்பட்ட மோதலால், தி.க.,வில் இருந்து வெளியேறிய அண்ணாதுரை, 1949 செப்டம்பர் 17ல், தி.மு.க.,வை துவக்கினார். அன்று முதல், 'ஹிந்து விரோத கட்சி' என்ற குற்றச்சாட்டு, அக்கட்சி மீது வைக்கப்பட்டு வருகிறது.

அதை மாற்றுவதற்காக, 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்ற, திருமந்திர வாக்கியத்தை, அண்ணாதுரை முன்வைத்தார். ஆனாலும், ஹிந்து விரோத கட்சி என்ற முத்திரை மாறவில்லை. மற்ற மத பண்டிகைகளுக்கு தவறாமல் வாழ்த்து கூறும் தி.மு.க., தலைவர்கள், ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூற மாட்டார்கள். இதை பா.ஜ., தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
இது குறித்து, சட்டசபையில் பேசிய பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி, 'தி.மு.க., தலைவராக ஸ்டாலினிடம் ஹிந்துக்கள் வாழ்த்தை எதிர்பார்க்கவில்லை. ஆனால், அனைவருக்கும் பொதுவான முதல்வராக ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்க மறுப்பது ஏன்' என, கேள்வி எழுப்பினார்.
அதற்கு நேரடியான பதில் எதுவும், தி.மு.க., தரப்பில் இருந்து வரவில்லை.
கடந்த 2015-ல், 'நமக்கு நாமே' பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், 'தி.மு.க.,வில் இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் ஹிந்துக்களே. தி.மு.க., ஹிந்து எதிர்ப்பு கட்சி என்பது போன்ற மாயை பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், என் குடும்பத்தினரும், தொண்டர்களின் குடும்பத்தினரும் இறை நம்பிக்கை கொண்டுள்ளனர்' என்றார்.
இந்நிலையில், 'நானும் என் மனைவியும் கிறிஸ்துவர்கள்' என்று, தி.மு.க.,வின் எதிர்கால வாரிசு உதயநிதி பேசியிருப்பது, ஹிந்து விரோத கட்சி தி.மு.க., என்ற பா.ஜ.,வின் பிரசாரத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இருப்பதாக, தி.மு.க.,வினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
கடந்த சட்டசபை தேர்தலில் 15 சதவீத சிறுபான்மையினர் ஓட்டுகள் முழுமையாக கிடைத்தும், அ.தி.மு.க., கூட்டணியை விட, ஆறு சதவீத ஓட்டுகள்தான் தி.மு.க.,வுக்கு அதிகம்.
தி.மு.க.,வுக்கு எந்த அளவுக்கு சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்கிறதோ, அந்த அளவுக்கு ஹிந்துக்களின் ஓட்டுகளை இழந்து வருகிறோம்.
இந்நிலையில் உதயநிதியின் பேச்சு, பா.ஜ.,வினருக்கு அவல் கொடுத்தது போலாகி விட்டது. அதனால் தான், உதயநிதியின் பேச்சை, தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழ் வெளியிடவில்லை.
மேலும் அவர், இவ்வளவு நாள், அமைச்சர் என்ற பொறுப்பில் இல்லாதவராக இருந்தார். தற்போது அமைச்சர் ஆகிவிட்ட பின், இது போன்று இரண்டாம் தரமான பேச்சுக்களில் ஈடுபடுவது, ரசிக்கும்படியாக இல்லை.
கருணாநிதி காலத்தில், அமைச்சர்கள் யாரும் இது போன்று பேசியதில்லை. சின்ன குத்துாசி போன்ற பேச்சாளர்கள் மட்டுமே இப்படி பேசி உள்ளனர். கருணாநிதியே, இந்திராவை கொச்சையாகப் பேசியதை, யாரும் ஏற்கவில்லை என்ற பின், அப்படிப் பேசுவதைத் தவிர்த்து விட்டார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன், இப்படிப்பட்ட பதவி கிடைக்காதா என்று ஏங்கினோம்; உண்மை தான். ஆனால், பதவிக்கு வந்த பிறகு தான், ஆட்சி செய்வது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்து கொண்டோம்.
பொறுப்பான பதவிக்கு வந்த பின், சிறுபிள்ளைத்தனமாக இவர் பேசுவது, கட்சிக்கு கெட்ட பெயரையும், ஓட்டு இழப்பையும் ஏற்படுத்துமே தவிர, நல்லதை ஏற்படுத்திக் கொடுக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.