ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி:
எம்.ஜி.ஆர்.,
கட்டி இருந்த கடிகாரம் பற்றி, கருணாநிதி மோசமாக விமர்சனம் செய்தார்.
'ராஜாஜி அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடியால் பார்த்தால் எல்லாமே தெரியும்'
என, விமர்சித்தனர். காமராஜரின் வீட்டை ஸ்விட்சர்லாந்து வீடுகளுடன்
ஒப்பிட்டு கிண்டல் செய்தனர்.
பக்தவத்சலத்தை, 'பத்து லட்சம் பக்தவத்சலம்' என்றனர். எந்த தலைவரை, தி.மு.க., நாகரிகமற்று விமர்சித்தாலும், அந்தத் தலைவர்கள் மக்கள் மத்தியில் அதிகம் புகழ் பெறுவர். இப்போது, அண்ணாமலையின் கடிகாரம் பற்றி மலிவாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால், அண்ணாமலை மக்கள் மத்தியில் மேலும் புகழ் பெறுவார்.
இவரது கருத்து ஆருடமாகவே இருந்தாலும், அண்ணாமலையின் வளர்ச்சி அதை உறுதிப்படுத்தவே செய்கிறது!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழகத்தில், 20-21-ல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படாததால், தமிழக மாணவர்களால், ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. ராஜ்யசபாவில் இதை சுட்டிக்காட்டி, தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். அதையேற்று, தமிழ்நாடு மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவர் சொல்றதை மத்திய அரசு கூட கேட்கிறது... ஆனா, 'டாஸ்மாக்'கை மூடுங்க என்றால், இந்த மாநில அரசு கேட்கிறதா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி: தற்போது, உருமாறிய கொரோனா வைரஸ் வெகு வேகமாக பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, வெளிப்படை தன்மையோடு செயல்பட வேண்டும். ஜூன் மாதத்தில் மிகப்பெரிய தாக்கம் இருக்கும் என, வல்லுனர் குழு கூறுகிறது. அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்.
அரசியல்வாதியான இவர் ஒரு டாக்டரும் கூட... ஆனா, இப்படி அனைவருக்கும் பீதி ஏற்படுத்தும் வகையில் பேசுவது சரியா?
உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து அறிக்கை: பொங்கலுக்கு கரும்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன், ஓராண்டு பயிரான கரும்பை தமிழக விவசாயிகள் முன்கூட்டியே பயிர் செய்துள்ளனர். கரும்பு கொள்முதல் செய்யப்படவில்லை எனில், எண்ணற்ற விவசாயிகள் பாதிக்கப்படுவர். கரும்பு இல்லாத பொங்கல் பண்டிகை கசக்கும். கரும்பு இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்கக் கூடாது.
விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், இந்த பிரச்னையில் அரசு இறங்கி வரும் என எதிர்பார்க்கலாம்!