வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
விழுப்புரம்: 'நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில் திமுக பலமான வெற்றிப்பெறவும், சட்டசபை தேர்தலில் நாங்களெல்லாம் வெற்றி பெறவும் அமைச்சர் உதயநிதி தான் காரணம்' என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் அத்தியூர் திருவாதியில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பங்கேற்று பேசியதாவது: அமைச்சராக உள்ள உதயநிதியை 'என்னுடைய கால் தூசிக்கு சமம்' என்று சிவி சண்முகம் கூறியிருக்க கூடாது. அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பேச வேண்டும் என்று பேசக்கூடாது.
முதலில் ஓ பன்னீர்செல்வம் பக்கம் இருந்துவிட்டு அப்புறம் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் போன இவரெல்லாம், அரசியலை பற்றி பேசத் தகுதியில்லை. ஈ.வே.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டாம்.

திமுக.,வில் அரசியலில் ஈடுபாடு கொண்ட வாரிசுகள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. சிவி சண்முகம் உதயநிதியை விமர்சிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். சிவி சண்முகத்தின் தந்தை, எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் அதிமுக.,வில் முக்கிய பொறுப்பாளராகவும், எம்.பி.,யாகவும் இருந்தவர்.
இவரே வாரிசுதான். அவருக்கு திமுக பதில் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லும். உதயநிதியை ஏன் இவ்வளவு சீக்கிரம் அமைச்சராக்க வேண்டும் என சிலர் கேட்கின்றனர். உண்மையில் ஒன்றரை ஆண்டுகள் கழித்தே அமைச்சராகி உள்ளார்.

நானெல்லாம் உள்ளே நுழைந்தபோதே எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தவர் கருணாநிதி. ஆனால் உதயநிதிக்கு தாமதமாகவே அப்பதவி கிடைத்துள்ளது. ஈ.வே.ரா.,வின் கொள்கைகளை கொண்டவர், இளைஞர்களிடம் அன்பாக பழகக்கூடியவர். எல்லோருக்கும் நல்லது செய்யவேண்டும் என நினைப்பவர்.
நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில் திமுக பலமான வெற்றியை பெறுவதற்கு உதயநிதி தான் காரணம். அதேபோல் சட்டசபை தேர்தலில் நாங்களெல்லாம் வெற்றி பெற்றோமானால், அதற்கு முழு காரணம் உதயநிதியின் பிரசாரம் தான். இவ்வாறு அவர் பேசினார்.