பொதுவாக நம் மரபில் ஒருவர் இறந்து விட்டால், அவரை எரிப்பதோ புதைப்பதோ தான் வழக்கம். ஆனால் தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் சகாடா (Sagada) பகுதியில், இகோரோட் (Igorot) எனும் பழங்குடியின மக்கள் , இறந்த தங்கள் உறவினர்களை சவப்பெட்டியில் வைத்து இறுதி சடங்குகள் எல்லாம் முடித்துவிட்டு பின்னர், அருகிலுள்ள மலைக்குச் சென்று அந்தப் பெட்டியைத் தொங்க விட்டுவிடுகிறார்கள்.
"இறந்தவரின் உடலைப் பாதுகாக்கவே இவ்வாறு செய்கின்றோம். அவரது உடல் இவ்வாறு சிதைவுறாமல் இருந்தால்தான், அவரால் விண்ணகம் செல்ல முடியும்", என்று நம்பிக்கை அங்குள்ள பழங்குடியின மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதுபோன்று இறந்தவர்களை, ஆங்காங்கே மலைமுகடுகளில் சவப்பெட்டியுடன் தொங்கவிடும் இந்த நடைமுறை பலராலும் வியப்புடன் பார்க்கப்படுகின்றது.
இவர்கள் சுமார் 2,000 ஆண்டுகளாக, இதுபோன்று இறந்தவர்களைப் புதைக்காமல் பதப்படுத்தி வைப்பதாக கூறப்படுகிறது. மேலும் சவப்பெட்டியிலுள்ள உடல் அழுகும் என்று நமக்கு சந்தேகம் எழும் அல்லவா; அதற்கும் இவர்களிடம் ஒரு வழி உள்ளது. அந்தப் பெட்டியை மூலிகைகளால் நிரப்பி, சற்று மூலிகைப் புகையை காட்டி அதில் ஆணி அடித்து விடுவர்.
![]()
|
பின்னர் சவப்பெட்டியை மழைக்கு எடுத்துச் சென்று, மலை உச்சியில் இருந்து இறந்தவரின் பெயரை மூன்று முறை கூறுகின்றனர். இவ்வாறு கூறினால் முன்னர் இறந்த தங்களுடைய முன்னோர் அவர்களை வந்து வரவேற்பார்கள் என்பது இவர்களது நம்பிக்கையாகும். அதன் பிறகு அந்த சவப்பெட்டியை கயிற்றில் கட்டி கீழே இறக்கி மலையில் தொங்க விட்டு விடுகின்றனர்.
ஒருமுறை மூடிய சவப்பெட்டியை மறுமுறை திறப்பது கடவுள் குற்றம் என்றே கருதுகின்றனர்.
ஆனாலும் இதுபோன்று அழுகும் சூழல் எப்போதாவது ஏற்படும் என்றும் தெரிவிக்கின்றனர். அப்போது, அதில் மட்டும் மூலிகை ரசாயனத்தை சொட்ட விடுவார்களாம். இவர்களை புதைக்கும் அந்த சவப்பெட்டியில் அவர்களது பெயரை எழுதி வைத்திருக்கின்றனர்.
![]()
|
தாயின் கருவறையில் எந்த வடிவத்தில் இருந்தார்களோ, அதே போன்ற வடிவத்திலேயே இவர்களை அந்த சவப்பெட்டிக்குள் வைக்கின்றனர். இதுபோன்று உயிரிழந்தவர்களின் உடல்களை பாதுகாத்து வைப்பது சீனா மற்றும் இந்தோனேசியாவிலும் வழக்கத்தில் இருந்துள்ளது.
இந்த தொங்கும் கல்லறைகளைப் பார்வையிட ஓர் சுற்றுலா தளமாகவும், புனித தளமாகவும் ஏராளமானோர் இந்த இடத்தை நோக்கி வருகின்றனர். இதன் காரணமாக அங்குள்ள மக்களுக்கு பொருளாதார வகையிலும் மேம்பாடு கிட்டுவதாக கூறுகின்றனர். இதுபோன்ற நம்பிக்கைகளை இனி வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக பின்பற்றுவோம் என்கின்றனர்.