வி.சி., கட்சி எம்.பி., ரவிகுமார் அறிக்கை: 'ஆதிதிராவிடர்களை உள்ளடக்கிய வளர்ச்சியே திராவிட மாடல்' என, முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். அ.தி.மு.க., ஆட்சி மனநிலையிலிருந்து மாறாத அதிகாரிகளின் காதில், அது விழவில்லை. ஆதிதிராவிட மக்களுக்கான திட்டங்களை முடக்கும் அதிகாரிகள், பல்லாயிரக் கணக்கான ஆதிதிராவிட மக்களின் வாழ்வை கருக்குகின்றனர். 2021- - 22ம் நிதியாண்டில் ஆதிதிராவிட மக்களுக்கான, 13 திட்டங்களுக்கு, ஒரு ரூபாயும் செலவிடாமல் முடக்கியது, கீழ்வெண்மணி படுகொலைகளை விட மோசமானது.
* 'திராவிட மாடல்' ஆட்சியாளர்கள் மீது பழி போட முடியாம, அதிகாரிகளை இவர் பலிகடா ஆக்குவது நன்றாகவே தெரிகிறது!
***
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: அரசு பள்ளிகளில், 10 ஆண்டுகளாக, உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை உள்ளிட்ட, 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்; அவர்கள், தங்களை பணி நிந்தரம் செய்யும்படி, பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை கருணையோடு பரிசீலித்து, பணி நிரந்தரம் செய்து, பொங்கல் பரிசாக அவர்கள் குடும்பங்களில் விளக்கேற்ற வேண்டும்.
இவர்களை போல, பல ஆயிரம் பேர், பல துறைகளில் தற்காலிக பணியாளர்களாக இருக்காங்க... அவங்களுக்கும் சேர்த்து ஒரு வேண்டுகோள் வச்சிருக்கலாமே... காசா, பணமா... அறிக்கை எழுத ஒரு பேப்பர் தானே செலவு!
மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை: ஜவுளி தொழிலின் தற்போதைய நெருக்கடி, வேலைவாய்ப்பு, உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி ஆகிய அனைத்து அம்சங்களையும் கணக்கில் வைத்து, பா.ஜ., அரசு பஞ்சு இறக்குமதிக்கு விதித்துள்ள, 11 சதவீத வரியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
உங்க கட்சியின் எம்.பி.,க்கள் இருவரையும், லோக்சபாவில் இதற்காக குரல் கொடுக்க சொல்லுங்க!
புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி பேட்டி: தமிழகத்தில் முதன் முறையாக, புலம் பெயர்ந்த தமிழர்களின் நல வாரியத்தை, முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி இருக்கிறார். புலம் பெயரும் தொழிலாளர்களை அழைத்து வரும் ஏஜன்சிகளுக்கு அங்கீ காரம் வழங்கி, அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த வாரியம், நிஜமாகவே புலம் பெயர்ந்த தமிழர்களுக்கானதா அல்லது தேர்தல்ல தோற்ற விரக்தியில இருந்த சிவசேனாபதியை, 'தேற்ற' முதல்வர் உருவாக்கியதா?
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் பேட்டி: சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் தொழிலாளர் போர்வையில், வங்க தேச தீவிரவாதிகள் உலா வருகின்றனர். நக்சல் நடமாட்டம், விடுதலை புலிகளால், பயங்கரவாத செயல்களுக்கு திட்டம் தீட்டப்படுகிறதோ என்ற சந்தேகமும் உள்ளது. எனவே, அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவரது எச்சரிக்கையை அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக்க மாட்டேங்குதே... குதிரை ஓடிய பிறகு லாயத்தை பூட்டிய கதையாகாம இருந்தா சரிதான்!