ஜிப்மரில் அண்மையில் மருந்து தட்டுப்பாடு நிலவியது. இதுகுறித்து சபாநாயகர் செல்வம், மத்திய சுகாதார அமைச்சரிடம் முறையிட்டார். இந்நிலையில் இருநாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ள மத்திய சுகாதார துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் நேற்று ஜிப்மரில் திடீர் ஆய்வு நடத்தினார்.
டென்ஷன்
வழக்கமாக மத்திய அமைச்சர்கள் வரும்போது அதிகாரிகளுடனான கலந்துரையாடலுடன் ஆய்வுக் கூட்டம் முடிந்துவிடும். ஆனால், நேற்று மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், ஒவ்வொரு துறையாக சென்று ஆய்வு நடத்தினார்.
ஜிப்மர் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு சென்ற மத்திய அமைச்சர், ரூ. 9 கோடி செலவில் நிறுவப்பட்ட நவீன புற்றுநோய் சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார். அப்போது, மையத்தின் வெளியே நோயாளிகள் தரையில் அமர்ந்திருந்ததை கண்ட அமைச்சர் டென்ஷன் அடைந்தார்.
சிகிசைக்கு லஞ்சமா
அவர்களிடம் அமைச்சர், ஜிப்மரில் சிகிச்சை எப்படி உள்ளது? லஞ்சம் கேட்கின்றார்களா என விசாரித்தார். அதற்கு நோயாளிகள் சிகிச்சை நன்றாக உள்ளது. ஆனால், அலைக்கழிக்க வைக்கின்றனர் என்றனர். அதனைத் தொடர்ந்து, நோயாளிகளுக்கு இருக்கை வசதி செய்திட உத்தரவிட்டார்.
மருந்து தட்டுப்பாடு
பின்னர், மருந்து தட்டுப்பாடு குற்றச்சாட்டு குறித்து விசாரித்தார். அதிற்கு ஜிப்மர் அதிகாரிகள், சில மாதங்களுக்கு முன் மருந்து சப்ளை செய்யும் நிறுவனங்கள் தாமதம் செய்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டது.
மத்திய சுகாதார அமைச்சர் சிறப்பு அனுமதி கொடுத்ததால் போதிய மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டது.தற்போது மருந்து தட்டுபாடு இல்லை என்றனர்.
இரவு நேர சிகிச்சை
இரவு நேரங்களில் சிகிச்சைக்கு வந்தால் டாக்டர்கள் விரைவாக உயிர்காக்கும் சிகிச்சை அளிப்பது கிடையாது என்ற பா.ஜ.,வினர் குற்றச்சாட்டு குறித்து ஜிப்மர் இயக்குனரிடம் விசாரித்தார். தொடர்ந்து, இரவில் வரும் நோயாளிகளை அலைகழிக்காமல் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
பரிசோதனை நீட்டிப்பு
ரத்த பரிசோதனை காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டுமே செய்யப்படுகிறது. இதனால், நோயாளிகள் ரத்த பரிசோதனை முடிவை தெரிந்து கொள்ள மறுநாள் வர வேண்டியுள்ளதாக நோயாளிகள் கூறியதை கேட்ட அமைச்சர், ரத்த பரிசோதனை மாலை 4 மணி வரை நீட்டிக்க உத்தரவிட்டார்.
ஆயுஷ்மான் காப்பீடு
பிரதமரின் ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் சரிவர செயல்படுத்துவது இல்லை என அமைச்சரிடம் சிலர் முறையிட்டனர். இந்த புகாரை மறுத்த அதிகாரிகள், ஆயுஷ்மான் திட்டம் ஜிப்மரில் செயல்படுத்தப்படுகிறது என்றனர்.
அதனைக் கேட்ட அமைச்சர், பிரதமரின் ஆயுஷ்மான் திட்டம் உலகின் பெரிய காப்பீடு திட்டம். ஏழை மக்களின் உயிர் காக்கும் சிகிச்சைக்காக உள்ளது. இதனை ஜிப்மர் நிர்வாகம் இன்னும் சிறப்பாக செயல்படுத்த உத்தரவிட்டார்.